மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: பூர்வாங்க பூஜைகள் நாளை மறுதினம் தொடக்கம்
மதுரை,மீனாட்சி அம்மன் கோவில்உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி ராஜகோபுரம், கோவிலின் உள்ளே
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி ராஜகோபுரம், கோவிலின் உள்ளே, வெளியே என பல்வேறு திருப்பணிகள் நடந்து உள்ளன. கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 182 யாக குண்டங்களுடன் பிரமாண்டமாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மற்ற ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் வருகிற 6-ந் தேதியில் (நாளை மறுநாள்) இருந்து 11-ந் தேதி வரை நடைபெறும். 6-ந் தேதி அன்று காலை 7 மணிக்கு மேல் அம்மன் சன்னதி சித்தி விநாயகர் சன்னதி முன்பு பூர்வாங்க பூஜைகள் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கும். அதை தொடர்ந்து பூஜைக்கு சுவாமியிடம் அனுமதி பெறுதல், கஜபூஜை, கோ பூஜை, தனபூஜை நடைபெறும். 9-ந் தேதி வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து 11-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. மாலை முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கு கிறது. அன்றைய தினத்தில் இருந்து 16-ந் தேதி வரை மூலவர் சன்னதிகளில் மராமத்து பணிகள் மேற்கொள்வதால் மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியை தரிசிக்க இயலாது. கும்பாபிஷேக தினத்தன்று தான் மூலவர் அம்மன், சுவாமியை தரிசிக்க முடியும். அதுவரை யாகசாலை இருக்கும் அம்மன், சுவாமியைதான் தரிசனம் செய்ய முடியும்.









