Religion
மீனாட்சி கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் உரிமையை நிலைநாட்டிய பெண் அறங்காவலர்கள் முன்னாள் அமைச்சர் தியாகராஜன் பெருமிதம்
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழில் தங்கள் பெயர் இல்லாதது குறித்த வழக்கில் 3 பெண் அறங்காவலர்களின் முயற்சியால் ஆண் அறங்காவலர்களின் உரிமைகளும் நிலைநாட்டப்பட்டுள்ளன என தி.மு.க., முன்னாள் அமைச்சர் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவராக தியாகராஜனின் தாயார் ருக்மணி உள்ளார். இவருக்குகீழ் தி.மு.க., அரசால் நியமிக்கப்பட்ட தலா 2 ஆண், பெண் அறங்காவலர்கள் உள்ளனர்.
கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 ல் நடக்கவுள்ள நிலையில் முதலில் அச்சிடப்பட்ட அழைப்பிதழில் அறங்காவலர்கள் பெயர்கள் இல்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பின்னர் அச்சிடப்பட்ட அழைப்பிதழில் அவர்களின் பதவி மட்டும் குறிப்பிடப்பட்டது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பெண் அறங்காவலர் சுப்புலட்சுமி வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், கும்பாபிஷேக கல்வெட்டில் அறங்காவலர்களின் பெயர்கள் இடம்பெற செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் தியாகராஜன் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:
பல காரணங்களுக்காக இந்த விவகாரத்தில் இதுவரை நான் விலகியே இருக்க முயன்றேன். உயர்நீதிமன்ற நீதிபதிகள் வாய்மொழியாக கண்டனங்களைத் தெரிவித்த அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள், இந்த விவகாரத்தில் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியவர்கள் அல்ல. அதிகபட்சம் அவர்கள் செய்த தவறு என்னவென்றால், தகுதியற்ற ஒரு நபருக்கு அடிபணிந்து செயல்பட்டதுதான்.
அதே நேரத்தில் மூன்று பெண் அறங்காவலர்கள் சட்டத்தின் கீழும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனைத்து நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் தங்களுக்கு இருந்த உரிமைகளுக்காக போராடினர். தங்கள் நிலைபாட்டில் உறுதியாக நின்ற அந்த மூன்று பெண்களின் முயற்சியால், ஆண் அறங்காவலர்களின் உரிமைகளும் மீண்டும் நிலைநாட்டப்பட்டன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.