Religion
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தமிழ் மந்திரங்கள் உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் சமஸ்கிருதத்துடன், தமிழ் மந்திரங்கள் ஓதுவார்களால் ஓதப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.17ல் நடக்கிறது. கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் சமஸ்கிருதத்துடன் தமிழுக்கும் முக்கியத்துவம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை தமிழிலும் நடத்த ஏற்பாடு செய்ய வலியுறுத்தி தமிழக அறநிலையத்துறை செயலர், கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம்: மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் சமஸ்கிருதத்துடன் சேர்த்து தமிழ் மந்திரங்களும் இடம்பெறும். 2009ல் கும்பாபிஷேகத்தின் போது தமிழ் ஓதுவார்கள் வேதபாராயணம் ஓதினர். அதுபோல் இம்முறை ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகளை ஓத ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே உள்ள நடைமுறை தற்போதும் பின்பற்றப்படும். இதுபோல் தாக்கலான மற்றொரு வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார் என்றார்.
இதை பதிவு செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயிலில் நீண்டகாலமாக பின்பற்றும் நடைமுறை தற்போதைய கும்பாபிஷேகத்திலும் பின்பற்றப்படும் என இந்நீதிமன்றம் நம்புகிறது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.
மதுரை ரமேஷ்குமார், மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை அமைதியான முறையில் நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க அறநிலையத்துறை செயலர், கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்,' என பொதுநல மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விழாவிற்கான வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. பல்வேறு துறைகளுடன் இணைந்து வசதிகளை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.