Religion
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
அன்னூர்: தாத்தம்ப்பாளையம், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 13ம் தேதி நடைபெறுகிறது.
தாத்தம்பாளையத்தில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலில், புதிதாக கர்ப்ப கிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகியவை கருங்கல் வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் விமான கோபுரம், பாலகணபதி, பாலமுருகன் சன்னதிகள் சுற்றுப் பிரகாரத்தில் அமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, திருப்பணி முடிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழா வருகிற 11ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. வருகிற 12ம் தேதி காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி பூஜையும், மதியம் விமான கோபுர கலசங்கள் பிரதிஷ்டையும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடைபெறுகிறது.
வருகிற 13ம் தேதி காலை 7:30 மணிக்கு அம்மன் விமான கோபுரத்திற்கும், இதையடுத்து அம்மன் மற்றும் விநாயகர் கோவிலுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தசதானம், தச தரிசனம், அபிஷேக, அலங்கார பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.