Religion
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்திற்கு 12 நிபந்தனைகளுடன் அரசு அனுமதி பக்தர்களுக்கு காப்பீடு செய்ய உத்தரவு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 ல் நடக்கவுள்ள நிலையில் பக்தர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்பது உட்பட 12 நிபந்தனைகளுடன் அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இக்கோயில் கும்பாபிஷேகம் செப்.17 காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக கோயில் பரிவார மூர்த்திகளுக்கு செப்.,16 அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பூஜைகள் நாளை(செப்.,6) முதல் துவங்குகிறது. கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கேட்டு அறநிலையத்துறைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
அதையேற்று 12 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கும்பாபிஷேகத்திற்காக நன்கொடை வசூலிக்கக்கூடாது. கோயில் நிதியை செலவிடக்கூடாது. உபயமாக செய்து கொள்ளலாம். இதைக்காரணம் காட்டி உபயதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது. யாகசாலை, பந்தல் போன்றவை தகர கூரையால் அமைத்திருக்க வேண்டும். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
கும்பாபிஷேகத்தின்போது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் பக்தர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும். சாரத்தின்மீதும், விமானத்தின் மீதும் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என்பது உட்பட 12 நிபந்தனைகளை அறநிலையத்துறை கமிஷனர் வினய் விதித்துள்ளார்.



