Religion
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அரசியல் தலையீடு கூடாது; கிருஷ்ணசாமி
சென்னை: 'மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், பார்வையாளர்களுக்கான சிறப்பு அனுமதியில், அரசியல் தலையீடு இருக்கக் கூடாது' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகள் கழித்து, வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியில், மேல்மாடத்திற்கு செல்ல, பலரும் ஆர்வம் காட்டுவர்.இந்நிகழ்ச்சிக்காக, 9,000 சிறப்பு அனுமதி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டும், ஆளுங்கட்சி அரசியல் தலையீடு காரணமாக வழங்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது.
பொதுவாக மீனாட்சி அம்மன் கோவிலின் உபயதாரர்கள், சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய எம்.பிக்கள், எம்.எல்.ஏ.,க்கள், நீதிபதிகள், அனைத்து சமுதாயத் தலைவர்கள் - பிரமுகர்கள் என பலரும், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவது உண்டு.
ஆனால், கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு, இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில், அச்சடிக்கப்பட்ட 9000 சிறப்பு அழைப்பிதழ்கள் இன்னும் வழங்கப்படாதது, ஆன்மிகப் பெரியோர், பக்தர்கள், முக்கியஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.
எனவே, எந்தவிதமான பாகுபாடுகளுக்கும் இடமின்றி, அச்சடிக்கப்பட்ட 9000 சிறப்பு அழைப்பிதழ்களும், எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது குழுவிடம் சிக்கிவிடாமல், ஹிந்து சமுதாய அனைத்து முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கக்கூடிய வகையில், ஹிந்து அறநிலையத் துறை வெளிப்படையாகவும், நேர்மையாகவும், அழைப்பிதழ்களை விநியோகம் செய்ய வேண்டும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், யாரையும் ஒதுக்கி வைக்கவோ, புறந்தள்ளவோ கூடாது. பாரபட்சமற்ற வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, சிறப்பு அழைப்புக்கான அழைப்பிதழ்களை, உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கபட்டுள்ளது.