மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்
கமுதி: கமுதி அருகே முஸ்டக்குறிச்சியில் நடந்த முகாமில் ரூ.4.39 லட்சத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் வழங்கினார்.
முகாமிற்கு கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், பரமக்குடி சப்–கலெக்டர் வினோதினி, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி முன்னிலை வகித்தனர். அப்போது வருவாய்த்துறை, சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, வேளாண் துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சாதனை விளக்க கண்காட்சிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
பின் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை மூலம் இயற்கை மரணம் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இ–பட்டா, இலவச வீட்டு மனை பட்டா, புதிய மின்னணு குடும்ப அட்டை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் 131 பேருக்கு ரூ 4.39 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.








