Politics
நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்
தொப்பம்பட்டி:பழநி தொப்பம்பட்டி கோரிக்கடவு அருகே ராஜம்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த செயல் விளக்க கண்காட்சியை கலெக்டர் துர்கா பார்வையிட்டார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 29 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள், 25 பயனாளிகளுக்கு பட்டா நகல், 7 பயனாளிகளுக்கு இறப்பு உதவித் தொகை, ஒரு பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, கூட்டுறவுத் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி, ஆதரவற்ற விதவைக்கு கடன் உதவி, வேளாண்மை துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம், இடுபொருட்கள், நாற்றுக்கள் தார்ப்பாய், நெல் விதைப்பான் உள்ளிட்ட ரூ.71 லட்சத்து 225 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக கலெக்டர் பேசுகையில், 'மாவட்டத்தில் மழை அளவு குறைவாக உள்ளது. காவிரி, வைகை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளில் பழுதான ஆழ்துளை கிணறுகளை கணக்கீடு செய்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நீரினை சேமிப்பதற்கு ஏற்ப மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்படும் என்றார்.
இணை இயக்குனர்கள் கோவிந்தராஜ், சரவணன், தனித்துணை கலெக்டர் ஹென்றி பீட்டர், சமூகநல அலுவலர் காலின் செல்வராணி, மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் சுகுமார், தாசில்தார் மங்களபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
