Politics
ரூ.55 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம்: மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.55 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வெண்மணியாத்துார் கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் தலைமை வகித்து, அரசு துறைகள் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வருவாய்த்துறை சார்பில், 91 பேருக்கு வீட்டுமனை பட்டா, 12 பேருக்கு முழுப்புலன் பட்டா, உட்பிரிவு பட்டாக்களும், 30 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறும் ஆணை, மாவட்ட வழங்கல் துறை சார்பில், 22 பேருக்கு ரேஷன் அட்டை
தோட்டக்கலைத்துறை சார்பில், 5 பேருக்கு ரூ.2,11,600 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.5,400 மதிப்பில் நெல், உளுந்து விதைகளும், சுகாதாரத்துறை சார்பில் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம், 190 பேருக்கு ரூ.55 லட்சத்து 86 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஊராட்சியில், 25 எக்டேர் பரப்பளவில் இயந்திர நடவு செய்வதற்கான ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. மக்கள் தொடர்பு திட்ட முகாமின் நோக்கமாக, மக்கள் வசிப்பிடத்திற்கே சென்று நல உதவிகள் வழங்கும் விதத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு, அரசு துறை திட்டங்கள் குறித்தும் அலுவலர்கள் விளக்கினர். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றனர்.
கூடுதல் கலெக்டர் ஆனந்த்குமார்சிங், ஆர்.டி.ஓ., ஏகாம்பரம், மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, வேளாண் இணை இயக்குநர்(பொ) சுரேஷ், தோட்டக்கலை துணை இயக்குநர் வெங்கட்ராமன், தாசில்தார் யுவராஜ், ஊராட்சி தலைவர் கலைவாணி ரமணன் மற்றும் அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
