Politics
ரூ.4.51 லட்சம் மதிப்பீட்டில் 224 பேருக்கு நலத்திட்ட உதவி
திருநின்றவூர்: திருநின்றவூர் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 4.51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 224 பேருக்கு நலத்திட்ட உதவிகளை, திருவள்ளூர் கலெக்டர் கவிதா மற்றும் பூந்தமல்லி த.வெ.க., – எம்.எல்.ஏ., பிரகாசம் வழங்கினர்.
திருநின்றவூர் அடுத்த கொசவம்பாளையம் கிராமத்தில் உள்ள சமூக நலக்கூடத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், திருவள்ளூர் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி த.வெ.க., – எம்.எல்.ஏ., பிரகாசம் பங்கேற்றார்.
இந்த முகாமில், திருநின்றவூர் நகராட்சி அலுவலக திட்டத்தில், 2.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 15 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இருவருக்கு தையல் இயந்திரங்கள், 118 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் என, மொத்தம் 4.51 ரூபாய் மதிப்பீட்டில் 224 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கவிதா மற்றும் எம்.எல்.ஏ., பிரகாசம் வழங்கினார்.
வருவாய் துறை, வேளாண் துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மனுக்களை, கலெக்டர் கவிதாவிடம் பொதுமக்கள் வழங்கினர்.
நீர்நிலைகளில் குப்பை கொட்டுவது தடுக்க எச்சரிக்கை பலகைகள் மற்றும் ‘சி.சி.டி.வி’ கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகிறோம். தனிநபர்கள் நீர்நிலைகளில் குப்பை கொட்டுவது கண்டறியப்பட்டால், வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள் கண்டறிந்து, அங்குள்ள மக்களை பத்திரமாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் வாயிலாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மழைநீர் வடிகால்வாய்கள், நீர்வழிப்பாதைகளை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. புழல் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து, அதிகாரிகள் வாயிலாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவுப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக, ‘மின்சாரம் துண்டிக்கப்படும்’ என, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
