Politics
தலைநகரில் த.வெ.க., நிர்வாகி ஓட ஓட வெட்டி கொலை... கொடூரம்! : வடமாநில முதியவரை அடித்தே கொன்ற கஞ்சா ஆசாமிகள்

சென்னை: பெசன்ட் நகரைச் சேர்ந்த, 45 வயது த.வெ.க., நிர்வாகியை, ஐந்து பேர் அடங்கிய ரவுடி கும்பல், ஓட ஓட விரட்டி, சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அதேபோல், கஞ்சா போதையில், ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் கும்பல், கஞ்சா புகைக்க பணம் தர மறுத்ததால், 60 வயது வடமாநில முதியவரை கைகளாலும், மரக்கட்டையாலும் அடித்தே கொன்றது. நேற்று முன்தினம் நள்ளிரவு கொடூரமாக நிகழ்ந்த இந்த இரு கொலைகள், தலைநகரில் வசிக்கும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, பெசன்ட் நகர், வண்ணாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 45. ரியல் எஸ்டேட் தொழிலதிபர். ஐ.டி., நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விடும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
அ.தி.மு.க.,வில், 174வது வார்டு வட்ட செயலராக இருந்தார். ஆட்சி மாற்றத்திற்கு பின், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, த.வெ.க.,வில் சேர்ந்து, வட்ட பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் மீது, கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், பெசன்ட் நகர், ராமசாமி அவென்யூவில் உறவினர் புருஷோத்தமன் என்பவருடன், நேற்று முன்தினம் இரவு பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கும்பல், கத்திகளுடன் கீழே இறங்கினர். இதை பார்த்த கண்ணன், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
ஆனால், அந்த கும்பல், அவரை சுற்றி வளைத்து வெட்டியது. கழுத்து, முதுகு, கால், கைகள், வயிறு மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியது. தடுக்க முயன்ற புருஷோத்தமனை தாக்கியதோடு, அவரை அங்கிருந்து துரத்தியடித்தது.
தாறுமாறாக அக்கும்பல் வெட்டியதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையே, கண்ணன் வெட்டி கொல்லப்படும் காட்சி இணையத்தில் பரவி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து, சாஸ்திரி நகர் போலீசார் நடத்திய விசாரணையில், அடையாறு பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் கொலை வழக்கில், கண்ணன் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது. இந்த முன்விரோதத்தில், வேலுவின் மகன் பரணி, 20, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கண்ணனை கொன்றது தெரிந்தது.
இதையடுத்து, பரணி, ராகேஷ், 20, திருவான்மியூர் நரேஷ், 20, கோட்டூர் மணிகண்டன், 20, இந்திரா நகர் ஹரிஹரன், 20, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
மாமூல் வசூலிப்பது மற்றும் கேபிள் தொழிலில் ஏற்பட்ட போட்டியால், திருவான்மியூரை சேர்ந்த கந்தன் மற்றும் சிவா இடையே முன்விரோதம் இருந்தது.
கடந்த 2009ல், கந்தன் தரப்பைச் சேர்ந்த சிலர், சிவாவை கொலை செய்தனர். இந்த வழக்கின் குற்றவாளிகளில், கொலை செய்யப்பட்ட கண்ணனும் ஒருவர். இக்கொலைக்கு பழிவாங்கும் விதமாக, சிவா தரப்பினர், 2013ல் கந்தனை கொலை செய்தனர்.
நந்தனம், தேவர் சிலை அருகில், சிவாவின் சகோதரர் வேலுவை, 2016ல் கந்தன் தரப்பினர் கொன்றனர். இந்த கொலையிலும், கண்ணனுக்கு மறைமுக தொடர்பு இருந்துள்ளது.
இக்கொலைகளுக்கு பழிக்குப்பழி தீர்க்க, வேலுவின் மகன் பரணி, நண்பர்களுடன் சேர்ந்து கண்ணனை கொலை செய்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
இக்கொலைக்கு, வேறு எதாவது காரணம் இருக்குமா என, பல்வேறு கோணங்களில் விசாரிக்கிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
த.வெ.க., நிர்வாகியும், ரவுடியுமான கண்ணன், நேற்று முன்தினம் இரவு வெட்டி கொல்லப்பட்டதை போலீசார் விசாரித்து வந்த நிலையில், நொளம்பூர் பகுதியில், வடமாநில தொழிலாளி ஒருவரை, ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர், சரமாரியாக அடித்தே கொன்ற சம்பவமும், தலைநகர் மக்களிடம் பீதியை கிளப்பி உள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித், 59, என்பவர், நொளம்பூர், கஜலட்சுமிபுரம் பகுதியில், குடியிருப்பு கட்டும் பணியிடத்தில் தங்கி, கட்டுமான பணிகளை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கட்டட வளாகத்தில் இருந்த அவரை, கஞ்சா போதையில் வந்த நான்கு பேர் சுற்றி வளைத்தனர். கஞ்சா புகைக்க, அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர்.
அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்த நான்கு பேரும், அபிஜித்தை சரமாரியாக தாக்கினர். நிலைகுலைந்த அவர், அங்கிருந்த மண் குவியல் மீது விழுந்தார்.
ஆனாலும் ஆத்திரம் தீராத அவர்கள், அபிஜித்தின் முகம் மற்றும் தலையில் கைகளாலும், அங்கே கிடந்த மரப்பலகையாலும் விடாமல் அடித்தனர்.
தவிர, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளையும், அவரது தலையில் வேகமாக போட்டனர். அபிஜித் மயங்கி விழும் வரை, அவர் மீதான தாக்குதலை அவர்கள் நிறுத்தவேயில்லை.
இதற்கிடையே, அபிஜித் உடன் தங்கியுள்ள சில வடமாநில வாலிபர்கள் தடுக்க வந்தனர். ஆனால், அவர்களையும், கஞ்சா போதை வாலிபர்கள் தாக்கினர்.
அவர்கள் அங்கிருந்து சென்றதும், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அபிஜித்தை மீட்ட சக ஊழியர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.
அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலே அபிஜித் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
நொளம்பூர் போலீசார் விசாரணையில், அபிஜித்தை தாக்கியது, அதே பகுதியைச் சேர்ந்த வசீகரன், 19, சபரி, 18, அஜய், 18, மற்றும் 12ம் வகுப்பு படிக்கும், 17 வயது சிறுவன் என தெரிந்தது.
இதையடுத்து, போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.
பொதுமக்களுக்கு யார் பாதுகாப்பு?
காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது, முதல்வர் பதிலுரை அளிப்பதற்கு முன்பாக, அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார். அதுவும், தன் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.,வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவர், சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழகத்தின் 'வெற்றி சட்டம்-- ஒழுங்கு' நிலை. தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா? இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக த.வெ.க., இருப்பதை நினைத்து வருந்துவதா? பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.