Politics
“குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க உள்ளது” - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

சென்னையில் நேற்றிரவு தவெக நிர்வாகி என்பவர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு வண்ணாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான கண்ணன். தவெக நிர்வாகியான இவர், நேற்று இரவு மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அதன்படி, இந்த கொலை சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2009ஆம் ஆண்டு சிவா என்பவரை கண்ணன் தலைமையிலான கும்பல் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த முன் விரோதம் காரணம் காரணமாக சிவா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கண்ணனை கொலை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார். அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!
தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா? இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா? இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)