Politics
இது தலைநகரமா? இல்லை கொ* நகரமா? - எம்.பி. கனிமொழி கேள்வி!!

சென்னை அடையார் வண்ணான்துறை பகுதியில், அலுவலகம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்த கண்ணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அதிமுகவில் வட்டச் செயலாளராக இருந்த கண்ணன், அக்கட்சியில் இருந்து விலகி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்துள்ளார். இந்த நிலையில் தான், இன்று தன்னுடைய அலுவலகத்தின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த கண்ணனை, 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச்சூழலில் தான், தவெக அரசின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது குறித்து எம்.பி. கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில் தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி” எனத் தெரிவித்துள்ளார்.