Politics
“சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கு இதுவே சாட்சி” - கனிமொழி எம்.பி. விளாசல்!

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன் (வயது 46) வண்ணாந்துறை பகுதியில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகத் தனிப்படை போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களின் அடிப்படையில் முக்கிய குற்றவாளிகளான பரணி, கார்த்திக், ஹரிஹரன், மணி மற்றும் நரேஷ் ஆகிய 5 பேர் அடுத்தடுத்து பிடிபட்டனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இந்த 5 பேரிடம் சாஸ்திரி நகர் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இக்கொலையானது கடந்த 2009ஆம் ஆண்டு அடையாற்றில் நடந்த சிவா என்பவரின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட பழிவாங்கும் தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் படுகொலை செய்யப்பட்ட கண்ணன் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவர் சமீபத்தில்தான் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார் என்பதும் போலீஸாரின் விசாரணையில் வெளிவந்துள்ளது.
அதே சமயம் இந்த படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில் த.வெ.க.வில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது.
மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தலைநகரமா, இல்லை கொலை நகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)