Politics
தலைநகரம் கொலைநகரம் !

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த த.வெ.க. ரவுடி வண்ணான்துறை கண்ணன் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் வசித்துவரும் இவர், ஐ.டி. நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்துவந்துள்ளார். செப்டம்பர் 5ஆம் தேதி இரவு, வண்ணான்துறை ராமசாமி அவென்யூ, எல்லையம்மன் கோயில் தெருவில் கண்ணன் நின்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரை கொடூர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து, இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பரணியுடன் சேர்த்து 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த கொலை பழிக்குப் பழி நடந்ததாக சொல்லப்படுகிறது. அதற்காக 5 தனிப் படை வைத்து போலீசார் விசாரித்துவருகிறார்கள்.
கொலைக்கான பின்னணி காரணங்கள் குறித்து விசாரித்தோம்... ஒரு பெண் விவகாரத்தால் 2009ஆம் ஆண்டு, 25ஆம் தேதி, அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த பிரபல ரவுடியான சிவா, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டி ருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த மங்கலேரி கந்தன் மற்றும் வண்ணான்துரை கண்ணன் டீம் சிவாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
அதன்பிறகு சிவாவின் தம்பியான வேலு, தன் அண்ணனின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு பழிக்குப் பழியாக, 2013ஆம் ஆண்டு கந்தனை கொலை செய்தான். இந்த கந்தனின் கொலைக்கு பிறகு கந்தனின் ஆட்களான கண்ணன், பிரசன்னாதேவி ஆகியோர் அடங்கிய டீமை, பிரபல ரவுடி சம்பவ செந்தில் கையில் எடுத்துக்கொண்டு அடைக்கலம் கொடுத்துவந்தான். கந்தனின் மனைவி தன்னுடைய கணவன் மரணத்திற்கு பழிவாங்க சம்பவ செந்திலிடம் சொல்ல, திட்டம் போட்டு கூலிப்படை தில் பாண்டி மற்றும் கவி டீம் மூலமாக 2016ஆம் ஆண்டு வேலுவை கொலை செய்தனர். ஆனால் இந்த கொலை வழக்கில் தில் பாண்டி மற்றும் கவிக்கு பதிலாக மற்றவர்களை இந்த கொலைக்கு சரண்டராகச் செய்துள்ளான் சம்பவ செந்தில். அதனைத் தொடர்ந்து, தற்போது வேலுவின் மகன் பரணி, தந்தையை கொன்ற கண்ணனை கொலை செய்துள்ளான். இதனைத் தொடர்ந்து, இதற்கு பழிவாங்கும் பொருட்டு தில் பாண்டி, கவியை வைத்து வேலுவின் மகனை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாம் சம்பவ செந்தில் டீம்! கொல்லப்பட்ட கண்ணனை அரசியலுக்குள் கொண்டுவந்ததே ராயபுரம் எம்.எல்.ஏ. விஜய் தாமுதானாம்.
மறுபுறம் த.வெ.க. எழும்பூர் பகுதி செயலாளர் ரவுடி ராஜேஸ், ராஜேஸின் அண்ணன் ரவுடி தமிழா இருவரும் மயிலை சிவகுமார் கொலைக்கு பழி வாங்க அழகு ராஜாவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த தமிழா, வி.சி.க. நிர்வாகி இளங்கோ கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்துவரும் சூழ்நிலையில், பழிக்குப்பழி வாங்கத் தயாராகி வருகிறார்கள். அதேபோல, த.வெ.க. நிர்வாகியை கண்ணன் கொலைக்கு பழிவாங்க துடிக்கும் சம்பவ செந்தில், தேவி டீமுக்கு கூலிப் படையாக வருவது, அம்பத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ.வான பாலமுருக னின் உறவினரான தில் பாண்டி மற்றும் கவி டீம் தானாம்.
இந்த தில் பாண்டியும், கவியும் சேர்ந்து எண்ணற்ற கொலைகளை செய்துள்ளனர். இவர்கள் மீது, சிவாவில் தொடங்கி வேலு, செங்கல்பட்டு ஊராட்சிமன்றத் தலைவர் விஜி கொலை, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை உட்பட அம்பத்தூரில் பல வழக்குகள் உள்ளன. இப்படி இவர்கள் மீதான குற்றச் செயல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த கவி மனைவிக்கு, அடுத்து வருகின்ற கவுன்சிலர் தேர்தலில் சீட் வாங்கிக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார் எம்.எல்.ஏ. பாலமுருகன். இதுபோக, வில்லிவாக்கம் மோசடி மன்னன் லைன் முத்துவேல், ரவுடிகளை கையில் வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி, 5 சதவீதம் முன்பணம் பெற்று மோசடி செய்துவந்துள்ளார். இவரை த.வெ.க.வில் இணைத்துக்கொண்டு, அவருடைய சகோதரிக்கு அரசு சார்ந்த பதவியையும் பெற்றுக் கொடுத்துள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
இப்படி அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் கட்சிக்குள்ளே இருக்கின்ற ரவுடிகளுக்கு பாதுகாப்பளித்து, ஊக்குவித்து வந்தால் எப்படி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கட்டிக்காக்க முடியுமென்ற கேள்வி எழுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)