Politics
“உளவுத்துறை என்ற அமைப்பு இயங்குகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது” - டி.டி.வி. தினகரன்!

குற்றவாளிகளைக் கண்காணிக்கும் உளவுத்துறை என்ற அமைப்பு இயங்குகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “திருவள்ளூரில் அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளை; சென்னையில் தவெக நிர்வாகி படுகொலை – தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு!” எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி மற்றும் குன்றத்தூர்–ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சோமங்கலத்தில் உள்ள ஏடிஎம் என இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அதே திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அருகே ஏடிஎம் இயந்திரத்தையே முழுமையாக கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கொள்ளையடித்துச் செல்லும் வடமாநிலக் கும்பல்களைக் கண்காணித்து கைது செய்யத் தவறியதே, மூன்றாவது முறையாக ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையடிக்கும் அளவுக்கு அக்கும்பலுக்கு துணிச்சலை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏடிஎம் இயந்திரங்களைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் வெளிமாநிலக் கும்பல், சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தொடர் கொலை கொள்ளைகளில் ஈடுபட்ட பவாரியா கும்பலோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அடுத்ததாகக் குடியிருப்புகளிலும் நுழைந்து தங்களது கைவரிசையைக் காட்டக்கூடும் என்பதால், அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்கக்கூட அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது.
அதோடு, சென்னை, அடையாறு அருகே தவெக நிர்வாகியும், சரித்திரப் பதிவேடு குற்றவாளியுமான ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கை கேள்விக்குறியாக்குவதோடு, குற்றவாளிகளைக் கண்காணிக்கும் உளவுத்துறை என்ற அமைப்பு இயங்குகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் ஏடிஎம் கொள்ளைகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்திடுவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள சட்டம்–ஒழுங்கு நிலைமையில் கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)