Politics
தவெக நிர்வாகி கொலை வழக்கு.. 5 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை.. தீவிர விசாரணை

சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி கண்ணன் வெட்டிக் கொல்லப்பட்டார். 5 பேர் கைது, விசாரணை நடைபெறுகிறது. உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட கோர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சாஸ்திரி நகர் அடுத்த வண்னாந்துறையை சேர்ந்த கண்ணன், கடந்த 2 மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கண்ணனை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கிக் கொன்றது. சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர் ஐந்து பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், தலைமறைவானவர்களை தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். திருவான்மியூரில் நடந்த கொலைச் சம்பவத்தில் கண்ணனுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் காவல் துறையினர் பழிக்கு பழியாக கொலை நடந்ததா? அல்லது அரசியல் நோக்கமா என விசாரித்து வருகின்றனர்.
அதேநேரம், தவெக நிர்வாகி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத் தலைநகரில் ஆளும் கட்சிப் பிரமுகரே ஓட ஒட கொல்லப்படும் வகையில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக பரணி, கார்த்திக், ஹரிகரன், மணி, நரேஷ் ஆகிய ஐந்து பேரை சாஸ்திரி நகர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டார் ஐந்து பேரிடமிருந்து கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களையும் சாஸ்திரி நகர் தனிப்பட்ட போலீசார் தற்போது பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
