Politics
அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் 33 ஆவணங்கள் பறிமுதல்
திருப்பூர்: அவிநாசியில், அரசு ஒப்பந்ததாரர் வீடு, நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய, 17 மணி நேர சோதனையில், குடிநீர் திட்ட 'டெண்டர்' தொடர்பான, 33 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த தி.மு.க., ஆட்சி யில், 2021 முதல் 2025 வரை நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் முறைகேடு, வேலை வாங்கி தருவது மற்றும் கட்சி நிதி வசூலித்தது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக, ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நேரு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, அவிநாசியில் அரசு முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணிக்கு சொந்தமான இரண்டு வீடுகள், நிறுவனம் மற்றும் காங்கேயத்தில் தனசேகரின் வீடு, நிறுவனத்தில், திருப்பூர், கரூர், தர்மபுரி போலீசார் சோதனை நடத்தினர்.
அவிநாசியில், நேற்று முன்தினம் காலை, 7:00 மணி முதல் இரவு, 11:50 மணி வரை நடந்த சோதனையில், 2021 - 2023 காலகட்ட குடிநீர் பணிகளுக்கான டெண்டர் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், 33 முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.