Politics
கே.என். நேரு வீட்டில் சோதனை: "தவெகவின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சமாட்டோம்" - ஸ்டாலின் பதிவு
கே.என். நேரு மீதான சோதனை அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்|DVAC searches linked to DMK MLA KN Nehru draw Stalin’s criticism, with the DMK chief alleging political motives behind the action.

திமுக எம்.எல்.ஏ கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக எம்.எல்.ஏ நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
இதற்கு கண்டனம் எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.
ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரைப் பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.
திரு. நேரு அவர்களும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்!'' என்றார்.
