Politics
கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை உள்ளிட்ட 19 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டரில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசு ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் வசூலித்ததில் மொத்தம் 1,020 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்ற புகாரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அதில் கிடைத்த ஆதாரங்களை கடந்த ஆண்டே தமிழ்நாடு டிஜிபிக்கு அனுப்பியது.
திமுக ஆட்சியில் இருந்த காரணத்தினால் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்படாத நிலையில், த.வெ.க. ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களின் படி கே.என்.நேரு, அவரது 2 சகோதரர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து சோதனை நடத்தப்படுகிறது.
சென்னை மயிலாப்பூர், திருச்சி தில்லை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகள், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனின் வீடு என மொத்தம் 19 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
அதேபோல், கே.என்.நேருவின் மற்றொரு சகோதரர் மணிவண்ணனின் கோவை அலுவலகத்தில் சோதனையிடப்படுகிறது.
தி.மு.க. ஆட்சியில் நகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலித்துள்ளதாகவும், அந்த பணம் உறவினர்கள், அதிகாரிகள், நெருங்கிய கூட்டாளிகள் வழியாகக் கையாளப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.
கே.என். நேருவின் சகோதரரான ரவிச்சந்திரன் லஞ்ச பணம் கைமாறியதை கண்காணித்ததில் முக்கியப் பங்காற்றியதாக குறிப்பிட்ட அமலாக்கத்துறை, லஞ்சப்பணம் யாரிடம், எவ்வளவு வசூலிக்கப்பட்டது என்பது ரவிச்சந்திரனிடம் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கே.என். நேருவின் மற்றொரு சகோதரரான கே.என். மணிவண்ணன், லஞ்சப் பணத்தை பாதுகாக்கும் முக்கியப் பொறுப்பை வகித்ததாக ED குற்றச்சாட்டியிருந்தது.
மேலும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களில், பணம் வசூலிக்கப்பட்டது மற்றும் செலவிடப்பட்டது குறித்த விவரங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து சோதனையிடுகிறது.