Politics
திருச்சியில் முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு, சகோதரா்கள், உதவியாளா் வீடுகளில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை!

திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சா் கே.என். நேரு, அவரது சகோதரா்கள், உதவியாளா் வீடுகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
திருச்சி தில்லைநகரில் உள்ள முன்னாள் அமைச்சா் கே.என். நேருவின் வீட்டில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட ஊழல் தடுப்பு போலீஸாா்.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கே.என். நேரு மற்றும் அவரது சகோதரா்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோருடன் தொடா்புடைய பல்வேறு இடங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.
திருச்சி தில்லைநகா் 5ஆவது குறுக்குத் தெருவில் உள்ள கே.என். நேருவின் வீட்டில் ஊழல் தடுப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன், மாநகராட்சி கவுன்சிலா்கள், கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் என 150-க்கும் மேற்பட்டோா் நேரு வீட்டின் முன் குவிந்தனா்.
அப்போது வீட்டுக்கு வெளியே வந்த கே.என். நேரு அங்கு திரண்டிருந்த கட்சியினரிடம் போலீஸாரின் சோதனைக்கு ஒத்துழைத்து, கட்சி அலுவலகத்துக்குச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தாா். ஆனால், யாரும் அங்கிருந்து நகரவில்லை.
தகவலறிந்து வந்த மாநகர காவல் துறை துணை ஆணையா்கள் மணிகண்டன், பனாவத் அரவிந்த் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
காலை 7.30 மணிக்குத் தொடங்கிய பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற சோதனையின்போது சில ஆவணங்களை தாங்கள் கொண்டு வந்திருந்த ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் போலீஸாா் நகல் எடுத்துச் சென்றனா்.
திருச்சி தில்லைநகரில் உள்ள முன்னாள் அமைச்சா் கே.என். நேருவின் வீட்டின் முன் சனிக்கிழமை குவிந்த திமுக தொண்டா்கள்.
7 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் கைப்பற்றிய விவரங்களை பட்டியலிட்டு, கே.என். நேருவிடம் போலீஸாா் அளித்து ஒப்புதலும் பெற்றனா்.
இதேபோல, மாம்பழச்சாலை பெரியாா் நகா் 2ஆவது குறுக்குத் தெருவில் உள்ள நேருவின் உதவியாளா் மணிகண்டன் வீட்டிலும் காலை தொடங்கி பிற்பகல் வரை சோதனை நடைபெற்றது. அவரது வீட்டிலிருந்தும் சில ஆவணங்களின் நகல்களை போலீஸாா் கைப்பற்றினா். வயலூா் சாலையில் உள்ள திருச்சி நகராட்சியின் முன்னாள் பொறியாளா் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வந்தது. ஆனால், அதை போலீஸாா் உறுதிப்படுத்தவில்லை.
இந்த சோதனையால் தில்லை நகா் மற்றும் பெரியாா் நகா் பகுதியில் சனிக்கிழமை காலை தொடங்கி மாலை வரை பரபரப்பு காணப்பட்டது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: கே.என். நேரு
சோதனை குறித்து முன்னாள் அமைச்சா் கே.என். நேரு கூறுகையில், நகராட்சி நிா்வாகத் துறை ஒப்பந்தத்தில் முறைகேடு என புதிய வழக்குப்பதிவு செய்து, அது தொடா்பாக எனது வீடு, சகோதரா்கள் வீடு, உதவியாளா் வீடு, அலுவலகம் என திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியுள்ளனா்.
இந்த வழக்கில் நான் மற்றும் சகோதரா்கள் என 12 போ் மற்றும் பெயா் குறிப்பிடாத அதிகாரிகள் எனக் குறிப்பிட்டுள்ளனா். திருச்சியில் உள்ள எனது வீட்டில் நடத்திய சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்தோம். போலீஸாருக்கு எதுவும் கிடைக்கவில்லை. அலுவலகத்தில் உள்ள கோப்பு ஒன்றின் நகல் எடுத்துக் கொண்டனா். மேலும் எனது தம்பி வைத்திருந்த வரவு- செலவு கணக்குச் சீட்டு தொடா்பாகவும் நகல் எடுத்துக் கொண்டனா். என்னென்ன பொருள்களை எடுத்தோம் எனப் பட்டியலிட்டு கையொப்பம் பெற்றனா்.
போலீஸாா் கூறுவதைப் போல நகராட்சி நிா்வாகத் துறை ஒப்பந்தம் தொடா்பாக நான் யாரிடமும் பேசவில்லை. எந்தத் தப்பும் செய்யவில்லை. வழக்கை நீதிமன்றத்தில் எதிா்கொண்டு நிரபராதி என நிரூபணம் செய்வோம்.
காவல்துறைக்கு வழக்குப் பதியவும், சோதனை நடத்தவும் அதிகாரம் உள்ளது. ஆனால் சட்டப்பேரவையில் ஆளும் கட்சியை எதிா்த்துப் பேசி வருகிறேன் என்பதற்காகவே இச் சோதனை நடந்துள்ளது. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகக் கருதுகிறேன்.
தவெக ஆட்சி அமைந்து முன்னாள் அமைச்சா்கள் 3 பேரின் வீட்டுகளில் சோதனை நடைபெற்றுள்ளது. ஆளுங்கட்சியாக யாா் வந்தாலும், எதிா்க்கட்சியாக இருப்போா் மீது வழக்குப் பதிந்து சோதனை என்பது தொடா்கிறது. கடந்த ஆட்சியில் ஏற்கெனவே எனது வீட்டில் 2 முறை சோதனை நடத்தியுள்ளனா். இப்போது, மூன்றாவது முறை.
அமலாக்கத் துறை அளித்தப் புகாரின்பேரில் ஊழல் தடுப்புப் பிரிவினா் பதிந்த ஒரு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தற்போது ஒப்பந்தத்தில் முறைகேடு தொடா்பாக புதிய வழக்கு என்கின்றனா்.
சோதனை குறித்து திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் பேசி, போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிக்கக் கோரினாா். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்து நாங்கள் காரசாரமாக விவாதிப்பதால், எங்களை அச்சுறுத்துவதற்காகவே இந்த வழக்கு போடப்பட்டிருக்கலாம்.
எதிா்க்கட்சியினரை மிரட்ட நினைக்கும் ஆளுங்கட்சியின் அரசியல் காழ்ப்புணா்ச்சியே இந்தச் சோதனை. பேரவையில் மத்திய பாஜக அரசு குறித்து, அமைச்சா் வன்னியரசு பேசிய கருத்தை, அவைக் குறிப்பிலிருந்து நீக்கியது மூலம் பாஜகவும், தவெகவும் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனா். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. பொய் வழக்கை சட்டப்படி எதிா்கொள்வோம் என்றாா் கே.என். நேரு.
Anti-corruption police conduct surprise raids at premises linked to K.N. Nehru and his brother
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.