Politics
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான சென்னை, திருச்சி உட்பட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில் இந்த சோதனை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள
சென்னை மற்றும் திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த திமுக அரசில் அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. தற்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். திமுகவின் முன்னணி முகங்களில் ஒருவராகவும் கே.என்.நேரு திகழ்கிறார். இந்த நிலையில் தான், சென்னை மற்றும் திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் தற்போது லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கே.என்.நேரு இல்லம், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லம் மற்றும் சென்னை அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரரின் இல்லம் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் திருச்சி தில்லை நகர் இல்லத்துக்கு கே.என்.நேரு தற்போது வந்திருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக 19 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வீடுகளில் நடந்து வரும் அதிரடி சோதனை தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக சோதனை என்பது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்தார் கே.என்.நேரு. அப்போது நகராட்சி நிர்வாகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 800 கோடிக்கு மேல் பெற்றுக் கொண்டு மோசடி நடைபெற்றதாக ஏற்கனவே வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே சோதனை நடத்திய நிலையில், அந்த வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
அதேபோல், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் முறைகேடு தொடர்பாக கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கிலும் சோதனையா என்பது சற்று நேரத்தில் தெரியவரும்.
