Politics
தி.மு.க., மாஜி அமைச்சர் நேரு வீடு, அலுவலகங்களில் சோதனை! அதிகாரிகள் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக வழக்கு 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சல்லடை
சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று, லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். கடந்த ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், பணி நியமனங்கள் மற்றும் டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 30 இடங்களில் சல்லடையாக சோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து, விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
விசாரணை இதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜூன் மாதம், தி.மு.க., ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலுவுக்கு தொடர்பு உடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தற்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த நேருவுக்கு சொந்தமான இடங்களில், நேற்று காலை 7:00 மணி முதல், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள நேரு வீட்டிலும், ஆர்.ஏ.புரத்தில் உள்ள நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் வீட்டிலும் சோதனை நடந்தது.
அப்போது, வீட்டில் இருந்த ரவிச்சந்திரன், அவரது மனைவியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர்.
நேருவின் மற்றொரு சகோதரரான மணிவண்ணனுக்கு சொந்தமான இடங்கள் உட்பட, திருவான்மியூர், அடையாறு, அண்ணாநகர் என, நேரு குடும்பத்தினர் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
தாசில்தார் நேரு வீட்டில் சோதனை நடந்த அதே நேரம், திருச்சி, ஸ்ரீரங்கம், பெரியார் நகரில் உள்ள நேருவின் முன்னாள் உதவியாளர் மணிகண்டன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், நேருவின் உதவியா ளராக இருந்த மணிகண்டன் தற்போது தஞ்சையில் தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.
அதேபோல, வயலுார் சாலையில் உள்ள திருச்சி மாநகராட்சி நகர பொறியாளராக இருந்த சிவபாதம் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சிவபாதம் தற்போது திருவண்ணாமலையில் பணிபுரிந்து வருகிறார்.
இதேபோல, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், முதல் நிலை ஒப்பந்ததாரரான வேலுமணிக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும், அவிநாசி - திருப்பூர் சாலையில் கைகாட்டி புதுார் பிரிவில் செயல்பட்டு வரும், 'வி.ஆர்.வாட்டர் இன்ப்ரா' அலுவலகம்
சோதனை!
உட்பட, மூன்று இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், காங்கயம் - கரூர் ரோட்டில் வசிக்கும் ஒப்பந்ததாரர் தனசேகர் வீடு, நிறுவனம் என, மொத்தம் நான்கு இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில், 2024 ஏப்ரல், 5ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறை அறிக்கையை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரலில், அமலாக்கத் துறையும் களத்தில் இறங்கியது. நேரு, அவரது மகன் அருண் நேரு மற்றும் அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் மறைந்த ராமஜெயம் ஆகியோருக்குத் தொடர்புடைய திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட, 15-க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் சிக்கிய ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபரில் அமலாக்கத் துறை, தமிழக டி.ஜி.பி.,-க்கு விரிவான கடிதம் அனுப்பியது.
அதில், நகராட்சி நிர்வாக துறையில் மேற்கொள்ளப்பட்ட 2,538 பணி நியமனங்களில், 150 பேரிடம் தலா 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், இதில் மட்டும் 888 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் அமலாக்கத் துறை சுட்டிக்காட்டியிருந்தது.
துாய்மைப் பணியாளர் குடியிருப்புகள், சாலைப் பணிகள், 'நபார்டு' திட்டங்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் துாய்மைப் பணியாளர்களை நியமித்தல் போன்ற டெண்டர்களில், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்பட்டு, லஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
அரசு அதிகாரிகள் லஞ்ச பணத்தை நேரடியாக மட்டுமின்றி, கட்சி நிதியாகவும் வழங்கி இருந்ததாகவும், இது தொடர்பான 'வாட்ஸாப்' உரையாடல்கள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனை விவரங்களையும், டி.ஜி.பி.,யிடம் அமலாக்கத் துறை அளித்தது.
பணி நியமனங்கள் மற்றும் டெண்டர்களில், 1,020 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்து உள்ளதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், கடந்த காலங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நேரு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த, டி.ஜி.பி.,க்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, நேரு உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, நேற்று சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பல்வேறு டெண்டர்களில் முறைகேடு நடந்த குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, நேற்று சென்னை, கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களில், 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், டெண்டர் முறைகேடு தொடர்பாக, 241 'டிஜிட்டல்' ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.