Politics
திமுக நேரு உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு: நகராட்சி டெண்டரில் ரூ.1,020 கோடி முறைகேடு புகார்

சென்னை: தி.மு.க., ஆட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 1,020 கோடி ரூபாய்க்கு, 'டெண்டர்' விட்டதில் முறைகேடு நடந்து இருப்பதாக, முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பிகள் உட்பட, 13 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த, தி.மு.க., ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் நேரு. தற்போது, திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
இவரது துறையில், 1,020 கோடி ரூபாய்க்கு டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேரு, அவரது தம்பிகள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், நேருவின் உதவியாளர் கவிபிரசாத், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சுதர்சனம், எபினேசர் உட்பட, 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், நேரு மற்றும் அவரது தம்பிகள் வீடு உட்பட, 30 இடங்களில் சோதனை நடத்தி, டெண்டர் முறைகேடு தொடர்பாக, 241 ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2021 - 2025ம் ஆண்டு காலகட்டத்தில், டெண்டர்கள் விடப்பட்டதில், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி, 1,020 கோடி ரூபாய் அளவுக்கு, நேரு மற்றும் அவரின் தம்பிகள் உள்ளிட்டோர் பலன் அடைந்து இருப்பதாக, அமலாக்கத்துறை, 258 பக்க அறிக்கை வழங்கி உள்ளது.
இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறையும் விசாரித்தது. அப்போது, டெண்டர் அறிவிப்பதற்கு முன்பே, தங்களுக்கு வேண்டிய நபர்களை தேர்வு செய்து, அவர்களிடம் இருந்து கட்சி நிதி என்ற பெயரில், டெண்டர் தொகையில், 7.5 முதல் 10 சதவீதம் வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
கவிபிரசாத், 'வாட்ஸாப்' வாயிலாக, மாதவரம் எம்.எல்.ஏ.,வாக இருந்த சுதர்சனத்திற்கு வேண்டிய ஒப்பந்ததாரர் பெயர் அனுப்பி வைக்கப்பட்டு, அவருக்கே, 75 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிக்கு, 525.15 லட்சம் ரூபாய்க்கான ஒப்பந்தத்தில், 55.15 லட்சம் ரூபாய் கட்சி நிதியாக வசூலிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி நகராட்சிகளில், 12.08 லட்சம் ரூபாய், திருப்பூரில், 155.79 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டு உள்ளது.
நேருவின் தம்பி மணிவண்ணனின் மொபைல் போனில் இருந்து கிடைத்த பதிவில், 31.30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது. அதேபோல, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த எபினேசர் வாயிலாக, 523.31 லட்சம் ரூபாய் டெண்டர் தொடர்பாக, கட்சி நிதி என, 55.15 லட்சம் ரூபாய் வசூல் நடந்துள்ளது. டி.வி.எச்., என்ற நிறுவனத்தை சேர்ந்த நேருவின் தம்பிகள் மணிவண்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் ரவிபிரசாத்துடன் இணைந்து, சட்ட விரோத பணப் பரிமாற்றத்தை ஒருங்கிணைத்துள்ளனர்.
அந்த நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ், பிரபு ஆகியோர், திருப்பூர் மற்றும் கோவை பகுதியில் தங்களுக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்ட விவகாரங்களில் பணம் வசூல் செய்துள்ளனர். டெண்டர் விவகாரம் தொடர்பாக, பல்வேறு வழிகளில், 7.5 - 10 சதவீதம் அளவுக்கு கட்சி நிதி வசூல் செய்ததுடன், அரசுக்கு, 1,020 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி, நேரு, அவரது தம்பிகள் உள்ளிட்டோர் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.