Politics
கே.என்.நேரு வீட்டில் ரெய்டு.. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்

கே.என். நேரு தொடர்புடைய 30 இடங்களில் சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அரசியல் உள்நோக்கம் என விமர்சித்தார்.
சென்னை, திருச்சி, கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய 19 இடங்களில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவண்ங்கள் என்ன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கே.என். நேருவின் இல்லத்தில் இன்று காலை முதல் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் டிவிஎச் குழுமத் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
இதேபோல் கோவையில் உள்ள டிவிஎச் நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. அங்கு அந்த நிறுவனத்தை நேருவின் மற்றொரு சகோதரரான மணிவண்ணன் நடத்தி வருகிறார். மேலும், கோவை ராமநாதபுரம் சிவராம் நகர் பகுதியில் வசிக்கும் ஓய்வுப் பெற்ற கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் சசிப்பிரியாவின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்து.
கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஆயிரத்து 20 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை புகார் அளித்திருந்தது. கட்டடம் கட்டுதல், கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமனம், குடிநீர் திட்டப் பணிகளுக்கான டெண்டர்கள் உள்ளிட்டவற்றில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு டெண்டருக்கும் 7.5 முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் 20 முதல் 25 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்கைப் பதிவு செய்து, கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் தற்போது சோதனை நடத்தினர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக 30 இடங்களில் இன்று நடந்த சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டன என லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கமளித்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கும், சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கையை தவெக அரசு மேற்கொண்டுள்ளது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும், குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக்கூடப் பதிவு செய்யாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில், வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையை இந்த அரசு கையில் எடுத்துள்ளது என சாடியுள்ள ஸ்டாலின், இந்தப் பூச்சாண்டிகளுக்கெல்லாம் நேருவும், திமுகவும் அஞ்சிவிட மாட்டோம் எனவும், சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
