Politics
'இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்'-மு.க.ஸ்டாலின் காட்டம்

தமிழகத்தில் 19-க்கும் அதிகமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சரான, திமுகவின் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருச்சி தில்லை நகரில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்கள், சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு மற்றும் இடங்கள் மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் இறங்கியுள்ளது. ரவிச்சந்திரனுக்கு சொந்தமான டிவிஹெச்(TVH) என்ற கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் சென்னை அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனையானது நடைபெற்ற வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை சிங்காநல்லூரில் உள்ள கே.என்.நேருவின் மற்றொரு சகோதரர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இது பூச்சாண்டி நடவடிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது. ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. கே.என்.நேருவும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்!' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)