Politics
டெண்டர் முறைகேடு வழக்கில் மாஜி அதிகாரி 7வது குற்றவாளி
கோவை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு மீது பதியப்பட்ட வழக்கில், கோவை மாநகராட்சி முன்னாள் நகரமைப்பு அலுவலர் சசிப் பிரியாவை, 7வது குற்றவாளியாக பதிவு செய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட 13 பேர் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில், 1,200 கோடி ரூபாய்க்கு டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக, தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிந்தது. அதில், 7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி வசூலித்ததாகவும் கூறியிருக்கிறது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் வழங்கியதில், அரசு அதிகாரிகளிடம் இருந்து சட்ட விரோத பணப்பலன் வசூலிக்க, பிரபு மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு, முன்னாள் அமைச்சர் நேரு அனுமதி அளித்ததாக குற்றம் சுமத்திஉள்ளது.
வழக்கில் சேர்க்கப்பட்டவர்களின் மொபைல் போன் 'வாட்ஸாப்' பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில், இவ்வழக்கில், 7வது குற்றவாளியாக கோவை மாநகராட்சியில் நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்த சசிப்பிரியா சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஓய்வுபெற்று விட்டார்.
எப்.ஐ.ஆர்.,ரில் 2021, ஜூலை 7ல் நடந்த 'வாட்ஸாப்' பதிவில், கோவை டி.பி.ஓ., சசிப்பிரியாவிடம், 20.90 லட்சம் ரூபாய் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னாள் அமைச்சர் நேரு சகோதரர் கே.என்.மணிவண்ணனை குறிக்கும் வகையில், கே.என்.எம்., என கூறப்பட்டிருக்கிறது. அதே நாள் இரவு 7:23 மணிக்கு 50 லட்சம் ரூபாய் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சசிப்பிரியா சட்ட விரோதமாக வசூலித்த பணத்தை பிரபு, ரமேஷ் மூலமாக மணிவண்ணனிடம் கொடுத்ததாகவும், அமலாக்கத்துறை விசாரணையில் ரமேஷ் ஒத்துக்கொண்டதாகவும், வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் அறிக்கையில் கூறியிருக்கிறது.
கோவை, சுங்கம் அருகே சிவராம் நகரில் சசிப்பிரியா வசிக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனைக்கு சென்றபோது, வீடு பூட்டியிருந்தது.
மாநகராட்சி பணியில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், லஞ்ச ஓழிப்புத்துறை வழக்கில் இப்போது சிக்கியிருப்பதால், தி.மு.க., ஆட்சி காலத்தில் சட்ட விரோதமாக பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் பலரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.