Politics
"அரசியல் காரணங்களுக்காகவே கே.என். நேரு வீட்டில் சோதனை" - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: மு.க.ஸ்டாலின் அரசியல் பழிவாங்கல் என குற்றச்சாட்டு. சென்னை, திருச்சி, கோவையில் 19 இடங்களில் சோதனை.
சென்னை, திருச்சி, கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கே.என். நேருவின் இல்லத்தில் இன்று காலை முதல் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் டிவிஎச் குழுமத் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல் கோவையில் உள்ள டிவிஎச் நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. அங்கு அந்த நிறுவனத்தை நேருவின் மற்றொரு சகோதரரான மணிவண்ணன் நடத்தி வருகிறார். இதற்கிடையே, முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கே.என்.நேருவின் வீட்டில் சோதனை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.
ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. கே.என்.நேருவும், திமுகவும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
அதேநேரம், முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள அமைச்சர் நிர்மல்குமார் புகார்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே சோதனை என விளக்கம் அளித்திருக்கிறார்.
