Crime, law and justice
சிவகங்கையில் இரட்டை கொலை ஐவர் கைது: உறவினர்கள் மறியல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கொடிக்காடு கண்மாயில் நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொலையானவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே குருந்தணிவாரியநேந்தல் தெய்வேந்திரன் 24, சிறுவேலங்குடி பூப்பாண்டி 25. இருவரும் நேற்று முன் தினம் மதியம் 2:30 மணிக்கு காரில் பையூர் அருகே கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு சென்று மது அருந்தினர். ஐந்து டூவீலரில் வாள்களுடன் வந்த 15 பேர் இருவரின் முகத்தை சிதைத்து கொலை செய்தனர்.
எஸ்.பி., அபிேஷக் குப்தா உத்தரவின்படி டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில் 5 தனிப்படையினர் விசாரித்தனர். சி.சி.டிவி., ஆதாரங்களின்படியும், அலைபேசியில் பேசிய விபரங்களின் அடிப்படையில் இக்கொலையில் ஈடுபட்டதாக பில்லுார் பாலமுருகன், 24, தனராஜ் 19, சந்தோஷ் 19, மாத்துார் சதீஷ்குமார் 25, அழுபிள்ளைதாங்கி காளீஸ்வரன் 23, ஆகியோரை கைது செய்தனர்.
கொலையானவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சிவகங்கை அரண்மனை வாசலில் நேற்று காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை -- தொண்டி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. போலீசார் மாற்று பாதையில் பஸ்களை அனுப்பினர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, தாசில்தார் சிவராமன், கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.