Crime, law and justice
சிவகங்கையில் 2 பேர் விரட்டி விரட்டி கொலை! சம்பவத்தின் பின்னணி என்ன?

சிவகங்கையில் பட்டப்பகலில் இருவர் கொடூரமாக ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், அம்மாவட்டத்தை கதிகலங்க வைத்துள்ளது.
சிவகங்கை, பழமலை நகர் பின்புறமுள்ள கொடிக்காடு கண்மாய் பகுதிக்குள் ஆண்கள் இருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. உடனே அங்குச் சென்ற போலீசார் சம்பவ இடத்தை பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்தனர்.
முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் திட்டமிட்டு இச்சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது உறுதியானது. இதனை அடுத்து, கொலை செய்யப்பட்டவர்கள் யார்? அவர்களைக் கொடூரமாக கொலை செய்தது யார்? என்ற விசாரணையில் உடல்களில் இருந்த ஆவணங்கள் மற்றும் செல்போன்களை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அதில் கொலையானவர்கள் காளையார்கோவிலை அடுத்துள்ள குருந்தனி வாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் பாண்டியன் என்பது தெரியவந்தது. சடலங்கள் கிடந்த பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் புதிதாக வாங்கப்பட்ட எர்டிகா கார் ஒன்று கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, நின்றிருந்தது.
கொலையான தெய்வேந்திரன் வாங்கிய புதிய கார் தான் இது. காரின் முதல் சர்வீஸுக்காக சோரூமிற்கு எடுத்துவந்து மீண்டும் எடுத்துச் செல்லும்போது இக்கொடூரம் அரங்கேறியுள்ளது. மதியம் 3.30க்கும் மேல் 4 -க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் காரை வழிமறித்து ஆயுதங்களால் கார் கண்ணாடி உடைத்து கதவைத் திறக்க முயன்றுள்ளனர்.
அப்போது உயிருக்குப் பயந்து காரில் இருந்து கீழிறங்கி ஓடிய இருவரையும், மர்ம கும்பல் விடாது துரத்திக் கொடூரமாக வெட்டி முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து தப்பி ஓடிய அந்த கொலையாளிகளைப் பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். சம்பவ ஏரியாவில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பதால் கொலையாளிகளைப் பிடிப்பதில் போலீசாருக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
மாவட்டம் முழுக்க அலர்ட் விடுக்கப்பட்டு, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இரட்டை கொலையை அரங்கேற்றிய கொடூர கொலையாளிகள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
