Politics
தாராபுரம் மக்களுக்கு என்ன பிரச்சனைகள் இருக்கின்றன? – லிஸ்ட் போட்ட சிபிஐ வேட்பாளர் லட்சுமணன்

தாராபுரத்தில் சிபிஐ சார்பில் லட்சுமணனும், மதுராந்தகத்தில் சிபிஎம் சார்பில் சுகந்தியும் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரிகள் தனித்து களம் காண்கின்றன. அதன்படி தாராபுரத்தில் சிபிஐ சார்பில் லட்சுமணனும், மதுராந்தகத்தில் சிபிஎம் சார்பில் சுகந்தியும் போட்டியிடுகின்றனர்.
இதன் மூலம், இரண்டு தொகுதிகளிலும் தற்போது தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் தவிர்த்து ஏனைய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் இன்று இடதுசாரிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து அறிமுகம் செய்தன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ வேட்பாளர் லட்சுமணன், “தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர்களாக இதுவரை வந்தவர்கள் மக்களுக்கான கோரிக்கைகளை முறையாக சட்டமன்றத்தில் பேசவில்லை. மக்களுக்கு ஏராளமான கோரிக்கைகள் உள்ள நிலையில், அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
நான் வெற்றி பெற்றால் மக்களின் குறைகளை நிச்சயமாக நிறைவேற்றுவேன். பாட்டாளி மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன். தாராபுரத்தில் குடிநீர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக உள்ளது. ஏராளமான மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். வீட்டுமனை பட்டாவுக்கான விண்ணப்பங்கள் ஓரளவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மக்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
உபரி நிலங்கள் பினாமி பெயர்களில் மறைக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த நிலங்களை மீட்டு, அவற்றை மக்களுக்கு வழங்க வேண்டும்.
தாராபுரம் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. தாராபுரம் மக்களுக்கு மாற்றம் தேவை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதால், அதனை தாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
