Politics
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர்கள் அறிவிப்பு...!

இடதுசாரிகள் யார் பக்கம் எனக் கூர்ந்து கவனிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள், பெரும்பான்மையின்றி தவித்த தவெகவுக்கு ஆதரவு தந்து ஆட்சி அமைக்க உதவின. இடதுசாரிகள் மட்டும் அமைச்சரவையில் பங்கு பெறாமல், ஆட்சிக்கு மட்டும் ஆதரவு தந்தனர்.
எனினும் மின்வெட்டு, பயிர்க்கடன் தள்ளுபடி, அதிமுக எம்எல்ஏக்கள் குதிரை பேர குற்றச்சாட்டு விவகாரங்களில் குரல் கொடுத்தனர். இந்தச் சூழலில் மாணவர் அமைப்பின் போராட்டங்களைத் தடுக்க சுற்றறிக்கை அனுப்பியது, குஜிலியம்பாறை வட்டத்தில் இடதுசாரிகளைக் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டது, புதிய தலைமைச் செயலக இடத் தேர்வு விவகாரங்களில் அரசுக்கெதிராக போராட்டத்திலும் குதித்தனர்.
தமிழகத்தை இடதுபுறமாக அதாவது இடதுசாரிகள் பக்கமாக திருப்புவது எனும் முழக்கத்தின் வேகம் அதிகரித்த நிலையில்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனால் இடதுசாரிகள் யார் பக்கம் எனக் கூர்ந்து கவனிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர். மேலும் இடைத்தேர்தல் இயற்கையாக வந்தது அல்ல, இது திணிக்கப்பட்ட தேர்தல் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் விமர்சித்தார்.
இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடவுள்ளதால் தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இடதுசாரிகள் கூட்டாக அறிமுகப்படுத்தினர். அதன்படி, தாராபுரம் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுராந்தகம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி என்பவர் போட்டியிடுவார் என அறிவித்துள்ளனர்.
இதில் சுகந்தி எம்ஏ பிஎட் முடித்தவர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கிறார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். 10 ஆண்டுகளாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளராக பணியாற்றியவர் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் சண்முகம் குறிப்பிட்டார்.
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வீரபாண்டியன் கூறும்போது, தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் லட்சுமணன் 9ஆம் வகுப்பு மட்டுமே முடித்தவர், 10ஆம் வகுப்பு இடைநிறுத்தம் செய்தவர் இப்போது கட்டிடத் தொழிலாளியாக இருப்பவர். தாயும் தந்தையும் கூலித் தொழிலாளிகள். கூலித் தொழிலை மேற்கொண்டே கட்சியின் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் என்றார்.
