Politics
சூடுபிடித்த இடைத்தேர்தல் : இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்பு!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களால் காலியான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் மாதம் 06 ஆம் தேதி (06.10.2026) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் எந்தவொரு முக்கியக் கட்சிகளுடனும் இணையாமல், இடதுசாரி கட்சிகள் தங்களுக்குள் ஒரு தனி அணியாக இணைந்து களம் காண முடிவு செய்தன.
அதன்படி, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் மற்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தங்களது வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
அதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சுகந்தி போட்டியிடுகிறார். அதேபோல, தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லட்சுமணன் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். மற்றொருபுறம் திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன் மூலம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் இதுவரை 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (15.09.2026) ஒரே நாளில் திமுக, நாதக, தவெக உட்பட 9 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (16.09.2026) கடைசி நாள் ஆகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)