Politics
பரபரப்பாகும் தாராபுரம் தேர்தல் களம்

தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு இரு நாட்களே உள்ளதால் தொகுதியில் பரபரப்பு ஏற்பட ஆரம்பித்துள்ளது.
தாராபுரம் (தனி) தொகுதியில் இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில், சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, தி.மு.க. சார்பில் சுகன்யா, நாம் தமிழர் சார்பில், கார்த்திகா ஆகியோர் பிரதான கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இடது சாரிகள் சார்பில், வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று மற்றும் நாளை என 2 நாள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் தனது பரபரப்பை துவங்கியுள்ளது. தி.மு.க. சார்பில் பணிமனை திறந்து விட்டனர். வேட்பு மனு இன்று தாக்கல் செய்ய உள்ளனர். த.வெ.க. – அ.தி.மு.க. சார்பில் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தாராபுரம் தொகுதியை பொறுத்த வரை, பிரதான கட்சியான த.வெ.க. – அ.தி.மு.க. – தி.மு.க., என, மூன்று கட்சிகளுக்கு இடையிலான மும்முனை போட்டியாக மாறியுள்ளது. 2021 தேர்தலில் தி.மு.க., வசம் இருந்து, தன்வசப்படுத்திய அ.தி.மு.க., மீண்டும் தக்க வைக்குமா அல்லது அ.தி.மு.க., வில் நின்று வென்று, பின் ராஜினாமா செய்து, த.வெ.க.,வுக்கு சென்ற சத்யபாமா மீண்டும் வெற்றியை தக்க வைப்பரா என்று பரபரப்பை தற்போதே துவங்கி விட்டது.
அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பு மனு தாக்கல் பணியை முடித்து விட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும், முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கான தேதிகள், இடம் ஆகியவற்றை கட்சியினர் திட்டமிட்டு வருகின்றனர். த.வெ.க., தரப்பில், கட்சி தலைவர் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னமும் தேதி முடிவு செய்யப்படாமல் உள்ளது.
அதேநேரத்தில், கட்சியினர், போலீஸ் தரப்பில் பிரசாரம் செய்ய வந்தால் எந்த இடத்தை தேர்வு செய்வது என்று முன்னெச்சரிக்கையாக, மூன்று இடங்களை பார்வையிட்டு வைத்துள்ளனர். இதில் ஏதாவது ஒரு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே, இந்த வார இறுதியில் இருந்து தாராபுரம் இடைத்தேர்தலில் ஒவ்வொரு நாளும் பிரசாரம் களைகட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வெற்றி கனியை பறிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஒவ்வொரு கட்சிகளும் பல்வேறு யுத்திகளுடன் களத்துக்கு தயாராகி வருகின்றனர்.