Politics
‘உள்ளே வரக்கூடாது...’ - தவெக வேட்பாளருக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் என்பவரும், தாராபுரம் தொகுதி சத்யபாமா என்பவரும் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்கள் எம்.எல்.ஏக்களாக பதவியேற்ற சில நாட்களிலேயே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர்.
இதனால் அந்த இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என திமுக, தவெக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று முடிந்துள்ள நிலையில், தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என 48 வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வேட்பாளர்கள் ஒவ்வொரு பகுதிக்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிடும் மரகதம் குமரவேல் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுராந்தகம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேலுக்கு, இடைத்தேர்தலில் போட்டியிட அவருக்கு மீண்டும் தவெக வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வகையில், அவர் மதுராந்தகம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட வீராணம் என்ற கிராமத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு அவர் சென்ற போது கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை, முதியோர் உதவித் தொகை வழங்கப்படவில்லை, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி மரகதம் குமரவேல் பிரச்சாரம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வீராணம் கிராமத்திற்குள் வரக்கூடாது என முழக்கமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)