Politics
“முதலமைச்சர் விஜய் மிகவும் தெளிவாக இருக்கிறார்” - பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து மாணிக்கம் தாகூர் பேட்டி!

த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் வரும் 9ஆம் தேதி (09.09.2026) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து இக்கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை தவெக அமைச்சர்கள் நேரில் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்களுக்கு த.வெ.க அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் உள்ளிட்டோர் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. அதற்காக அமைச்சர் அழைப்பு விடுத்தார்கள். இதற்கு முன்னதாகவே இது தொடர்பாக நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். எனவே, தமிழக காங்கிரஸ் கமிட்டி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும். எங்களைப் பொறுத்தவரை, இந்தக் கூட்டணிக்கு ஒரு பெயரை வைத்து, கூட்டணியை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதே நேரத்தில், மதச்சார்பற்ற சமூகநீதி அடிப்படையில் அமைந்துள்ள இந்தக் கூட்டணி பலமான கூட்டணியாக அமைய வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் ஒருமித்த கருத்தை எடுக்கக்கூடிய கூட்டணியாக இது இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தக் கூட்டணியின் இரண்டாவது கூட்டம் வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கோவளத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு யாரெல்லாம் அழைக்கப்பட்டிருந்தார்களோ, அவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றதால், கூட்டத்தொடர் முடிந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் கோவளம் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெறும் அடுத்தகட்ட கூட்டமாகும்.
பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவகாரம் முடிந்து போன கதை. அதை திரும்பத் திரும்ப பேச வேண்டியதில்லை. அவர்களைப் பொறுத்தவரை மிகத் தெளிவாக இருக்கிறார்கள். 2029ஆம் ஆண்டு ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் இருக்க வேண்டும். தமிழக மக்கள் அவருக்கு அளித்த வாக்குக்கு இணங்க, அவர் செய்ய வேண்டிய கடமைகளை இப்போதுதான் செய்யத் தொடங்கியிருக்கிறார்.
முதலமைச்சர் விஜய் மிகவும் தெளிவாக இருக்கிறார். அமைச்சர்களும் தெளிவாக இருக்கிறார்கள். மற்ற அனைவரும், பத்திரிகையாளர்களும், நண்பர்களும்தான் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை, மதச்சார்பற்ற சமூகநீதியை வெற்றி பெறச் செய்வதற்காக, இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி, அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழகத்தில் விஜய்யின் தலைமையில் இதை நாங்கள் தெளிவாக எடுத்துச் செல்வோம். இந்திய அளவில் ராகுல் காந்தி அதற்கான பொறுப்பை ஏற்று முன்னெடுத்துச் செல்வார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)