Politics
‘‘கூட்டணியை மதிக்காததால் காங்கிரஸுக்கு அவமானம்!’’

“விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமரவைத்த ராகுல் காந்தியே, 2029-ல் விஜய்யின் கையைப்பிடித்து பிரதமர் நாற்காலியிலும் அமரவைப்பார்” என த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி வீசியிருக்கும் அணுகுண்டு, கதர்ச் சட்டையினரைக் கதறவிட்டிருக்கிறது. இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...
“ ‘விஜய்தான் பிரதமர் வேட்பாளர்’ என த.வெ.க தரப்பினர் தொடர்ந்து சொல்லிவருகிறார்களே...?”
“காங்கிரஸ் கட்சியினுடைய ஒவ்வொரு தொண்டனுக்கும் ‘ராகுல் காந்தி பிரதமராக வேண்டும்’ என்பதுதான் ஆசை. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகப் போய்க்கொண்டிருக்கிறது. இன்றைக்குத் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் த.வெ.க அமர்ந்திருக்கிறது என்றால், அதற்கு காங்கிரஸ் கட்சி முதல் ஆளாகத் தெரிவித்த ஆதரவுதான் காரணம். இல்லையென்றால், த.வெ.க-வினால் ஆட்சியே அமைத்திருக்க முடியாது. இந்தச் சூழலில் த.வெ.க அமைச்சர்களே ‘விஜய்தான் பிரதமர் வேட்பாளர்’ எனத் தொடர்ச்சியாக பேசிவருவது உள்ளபடியே வேதனையளிக்கிறது.”
“அண்மையில் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி தெரிவித்திருக்கும் கருத்து, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை த.வெ.க ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறதுதானே?”
“பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை யார் ஏற்றுக்கொள்கிறார் களோ அவர்களோடுதான் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துக்கொள்ளும். ஆனால் தமிழ்நாட்டில், ‘ராகுல் காந்தியை நாங்கள் பிரதமராக ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என த.வெ.க அமைச்சர்களே புதிதாக ஓர் அற்பத்தனமான குரலை எழுப்பிவருகின்றனர்.
த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி, ‘2029-ல் விஜய்யை ராகுல் காந்தியே பிரதமர் நாற்காலியில் அமரவைப்பார்’ என்றெல்லாம் பேசியிருக்கிறார். இவ்வளவு சங்கடங்களுக்குப் பிறகும் த.வெ.க-வினர் இப்படிப் பேசுகிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.”
“பிரதமர் வேட்பாளர் ராகுல் என்பதில் உடன்பாடு இல்லை என்பதால்தான் த.வெ.க தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லையா...?”
“இந்த விவகாரம் குறித்து த.வெ.க-வின் தலைவர் விஜய், இதுவரை எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. ‘பிரச்னையான காலகட்டத்தில் எங்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் ஆதரவு தெரிவித்தது. ஆகவே, ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை நாங்களும் ஏற்றுக்கொள்வோம். இனிமேல் முரணாக எந்தக் கருத்தையும் கட்சியினர் தெரிவிக்க மாட்டார்கள்’ என்று இதுவரை த.வெ.க தரப்பிலிருந்து எந்தவொரு மறுப்பும் வெளிவரவில்லை.
ஆக, இப்போது ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?’ என்ற நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் வேதனையுடன் இருக்கிறார்கள்.”
“அப்படியென்றால், தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் பிரிந்து வந்தது தவறு என்கிறீர்களா?”
“தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் பிரிந்து வந்ததில் எல்லோருக்குமே வருத்தம் இருக்கிறது. ‘நட்புதான் முக்கியம்... நட்பைவிட்டுப் போகிறோமோ...’ என்ற என்னுடைய தனிப்பட்ட ஆதங்கத்தைக் கட்சித் தலைமையிடம் அப்போதே தெரிவித்திருந்தேன். ஆனால், கட்சி ஒரு முடிவெடுத்துவிட்ட பிறகு, தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதால் அமைதியானேன்.
என்னைப் பொறுத்தவரையில், ‘புதிய கூட்டணிக்காக நீண்டநாள் நட்புக் கூட்டணியை முறித்துக்கொண்டு போனதென்பது, மிகப்பெரிய விலையைக் கொடுத்து ஏமாந்துவிட்டோமோ’ என்ற உணர்வைக் கொடுத்திருக்கிறது. நட்புக் கூட்டணியை முறித்ததால், காங்கிரஸ்காரனுக்குத் தான் அவமானம்; சங்கடம்.”
“த.வெ.க கூட்டணிக்கு ரொம்பவும் முயற்சி எடுத்த மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இந்த விவகாரம் குறித்து என்ன சொல்கிறார்கள்?”
“அது குறித்து அவர்கள்தான் சொல்ல வேண்டும். அவர்கள்தான் போய் முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்தார்கள். அதன் பிறகும்கூட த.வெ.க தரப்பிலிருந்து எந்தவித மறுப்போ, அசைவோ வெளிப்படவில்லையே...”
“தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அண்மையில், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியும்கூட தீர்வு ஏற்படவில்லை என்கிறீர்களா?”
“எங்கள் கட்சித் தலைவர்கள் முதல்வரை நேரில் சந்தித்துப் பேசியதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படிப் பேசிவிட்டு வந்தவர்களும்கூட ‘இனிமேல் த.வெ.க-வினர் அப்படிப் பேச மாட்டார்கள்’ என்று எந்தவொரு தகவலையும் பொதுவெளியில் சொல்லவில்லை. ‘ஏமாந்து போய்விட்டோமோ...’ என்ற கவலையும் வேதனையும்தான் என்னைப் போன்றவர்களுக்கு இருக்கின்றன. கட்சித் தலைமைதான் அடுத்து என்ன முடிவு என்பதை அறிவிக்க வேண்டும்.”
“த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு என்ற முடிவு, ராகுல் காந்தியின் ஆசையும்தானே...?”
“த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு என்ற முடிவை அவர் எடுத்தார், இவர் எடுத்தார் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ‘என்னைப் பிரதமராக்க வேண்டும்’ என ராகுல் காந்தியா நேராக வந்து சொல்வார்... ஆக, ஏதோவொரு கணக்கில் நாங்கள் எடுத்த முடிவு தவறாகி, அவமானப்பட்டு நிற்கிறோம்.”
“ `இந்த விவகாரத்தின் பின்னணியில் சிலருடைய நரித்தந்திரங்கள் மறைந்திருக்கின்றன’ என மாணிக்கம் தாகூர் சொல்கிறாரே...?”
“இதிலென்ன நரித்தந்திரம் இருக்க முடியும்... ‘எங்க ஆளுங்க தெரியாம பேசிட்டாங்க... இனிமேல் அதுபோல் பேச மாட்டாங்க... ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்’ என த.வெ.க தலைவரோ, அமைச்சரோ பேசுவதில் என்ன பிரச்னை? அதனால்தான் எங்கள் அமைச்சர் ராஜேஷ்குமார், ‘ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக த.வெ.க ஏற்கவில்லை என்றால், நாங்கள் அமைச்சர் பதவியைத் துறப்போம்’ என மேடையிலேயே தெரிவித்துவிட்டார். அவரது கருத்தைத்தான் நான் இப்போது வழிமொழிந்து பேசுகிறேன்.”
