Politics
கூட்டணி கட்சியினரிடம் உஷாராக இருங்க; முதல்வருக்கு அர்ஜூன் சம்பத் அறிவுறுத்தல்

தஞ்சாவூர்: ''முதல்வர் விஜய், கூட்டணி கட்சியினருடன் உஷாராக இருக்க வேண்டும். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் அனுபவத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்,'' என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில், முதல்வர் விஜய் பங்கேற்க வேண்டும். ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசே முன்னின்று நடத்துகிறது; விழா பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. தமிழக அரசும் இதை முன்னுதாரணமாக ஏற்று, நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு, பாராட்டத் தக்கதாக இல்லை.
விஜயின் த.வெ.க., தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் உண்மையான மதச்சார்பற்றவர்கள் யாருமில்லை. 'மதச்சார்பற்ற' என சொல்லும்போதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் 'தொப்பி'யோடு நிற்கிறார். வி.சி.க.,வினரும் வைகோவும், அவர்களை விட மிகவும் மதச்சார்பற்றவர்கள்.
ஏற்கனவே தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில் 'மக்கள் நல கூட்டணி' என உருவாக்கப்பட்டு, ஓட்டுகளை பிரிக்கும் மறைமுக செயல் திட்டங்களை அரங்கேற்றினர்.இப்போது மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என்கிறார்கள். எனவே, தமிழக முதல்வர் விஜய், தன் கூட்டணி கட்சியினருடன் உஷாராக இருக்க வேண்டும். விஜயகாந்தின் அனுபவத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.