Arts, culture, entertainment and media
‘சர்வதேச அளவில் என் படத்தை எடுத்து செல்வேன்’ - அஜித் கொடுத்த உறுதி!

நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் நிலையில் அவரது ரேஸ் தொடர்பான பயணமும் ஆவணப்படமாக ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் அஜித்தின் ரேஸ் பயணம் மற்றும் அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசப்படுகிறது. இப்படத்தை அஜித்தை வைத்து கிரீடம் படம் இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அப்படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷே இதற்கும் இசையமைக்கிறார்.
இப்படத்தை கோல்டன் டிரோபி ஃபிலிம் புரொடக்ஷன் பேனர் சார்பில் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதனிடையே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இப்படம் தொடர்பாக அஜித் தனக்கு நள்ளிரவு போன் வந்ததாகவும் தன்னௌடைய இசையை பாராட்டியதாகவும் அதனால் அந்த இரவு முழுவதும் தனக்கு தூக்கம் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த சம்பவம் குறித்து கொஞ்சம் விரிவாக பேசிய அவர், “அஜித் சாருக்கு இந்த ஆவணப்படம் ரொம்ப பெர்சனல். ஏனென்றால் அவருடைய வாழ்க்கையை வைத்து எடுத்திருக்கிறார்கள். அதனால் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரின் இசையை கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துவிட்டார். உடனே எனக்கு நள்ளிரவு கால் செய்தார். ரொம்ப மகிழ்ச்சியாக பேசினார். இந்த படத்துக்காக இவ்வளவு உழைப்பு போடுகிறீர்கள், அதற்காக உங்களுக்கு திருப்பி கொடுக்கும் வகையில் இப்படத்தை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்று உங்களுக்கும் பெருமை சேர்ப்பேன் என்றார். அது எனக்கும் சந்தோஷமாக இருந்தது” என்றார். இதனை அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ படத்தின் தியேட்டர் விசிட்டின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)