Politics
"பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்"- தவெக கூட்டத்திற்குப் பிறகு மாணிக்கம் தாகூர்
விஜய் பிரதமர் வேட்பாளராக பேசப்பட்டு வரும் நிலையில், ‘எங்கள் விருப்பம் ராகுல் காந்திதான்’ என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்|Congress says Rahul Gandhi is its preferred PM choice, while Vijay would support the INDIA bloc’s final 2029 candidate, Manickam Tagore says.

2029 பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? விஜய், ராகுல் காந்தி குறித்து மாணிக்கம் தாகூர் அளித்த பதில் இதோ.
நேற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தவெக தரப்பிலிருந்து ‘2029-ம் ஆண்டு தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் பிரதமர்’ என்கிற பேச்சை அடிக்கடி கேட்க முடிந்தது.
இது தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸிற்கு நெருடலை ஏற்படுத்தியது. ஏனெனில் ராகுல் காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தி வருகிறது. இது குறித்த கேள்வி தமிழ்நாடு காங்கிரஸைத் தொடர்ந்துகொண்டே இருந்தது.
இன்று தவெகவின் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெகவின் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதும், ‘2029-ம் ஆண்டு விஜய் தான் பிரதமர் வேட்பாளரா?’ என்கிற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு மாணிக்கம் தாகூர், “‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்காக அமைக்கப்பட்ட மாநிலக் கூட்டணியாகும்.
அதேவேளையில், இதில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ளன. எனவே, இந்தக் கூட்டணி ‘இந்தியா’ கூட்டணியின் ஒரு பகுதியாகவே செயல்படும்.
தவெக என்ன செய்யும்?
‘இந்தியா’ கூட்டணியைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும்.
2029 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் முறைப்படி முடிவு செய்யப்படும்போது, அந்த வேட்பாளரை ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ முழுமையாக ஆதரிக்கும்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளருக்காகத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைப் பொறுத்தவரை எங்கள் விருப்பமும் வேட்பாளரும் ராகுல் காந்தி அவர்கள்தான். இருந்தாலும், பிரதமர் வேட்பாளரை ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்தே முடிவு செய்ய வேண்டும்.
பொதுத்தேர்தலுக்கு முன்பாக ‘இந்தியா’ கூட்டணி தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும்போது, அவரை எங்களது தமிழகக் கூட்டணியும் ஏற்கும். இதில் எந்த விதக் குழப்பமும் இல்லை” என்று பதிலளித்திருக்கிறார்.
