Politics
இடைத்தேர்தலில் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து வி.சி., கட்சி பிரசாரம்: திருமாவளவன் பேட்டி
கடலுார்:மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசாரம் மேற்கொள்ளும் என திருமாவளவன் கூறினார்.
இதுகுறித்து அவர் கடலுாரில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசாரம் மேற்கொள்ளும். வேட்பாளர்களின் வெற்றிக்காக கட்சியினர் முழுமையாகப் பாடுபடுவர்.
தி.மு.க., கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகள் வெளியேறுவதற்கு பதவி ஆசையே காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில்தான், அண்மையில் திருமண விழாவில் பேசியபோது, பதவி ஆசை மட்டும்தான் காரணமா? தி.மு.க.,வுக்கும், அதனுடன் அப்போது கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் இடையிலான உறவு எத்தகையதாக இருந்தது என்பதையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டாமா என்ற கோணத்தில் பேசினேன்.
அப்போது பல்வேறு காரணங்களை குறிப்பிடும்போது, தே.மு.தி.க.வு., க்கு தேர்தலின்போது தி.மு.க., கூட்டணியில் 10 தொகுதிகள் வழங்கியதில் கூட்டணிக் கட்சியினரிடையே கசப்பு ஏற்பட்டிருக்காதா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தேன். தே.மு.தி.க., வுக்கு தி.மு.க., கூட்டணியில் 10 தொகுதிகள் வழங்கப்பட்டபோது, அதை வரவேற்று அதற்கான காரணங்களைக் கூறிய ஒரே கட்சி வி.சி.க., தான். தே.மு.தி.க., வை திடீரென தி.மு.க., , கூட்டணியில் இணைத்ததற்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தபோதும், அதை வரவேற்றவன் திருமாவளவன்.
இன்றும்கூட தே.மு.தி.க., வை கூட்டணியில் ஏன் சேர்த்தீர்கள், ஏன் அதிக தொகுதிகள் கொடுத்தீர்கள் என்று நான் பேசவில்லை. ஆனால், தே.மு.தி.க., பொதுச் செயலர், நாங்கள் ஏதோ காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு வி.சி.க., குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவருடைய கருத்து அவருடைய கருத்தாகவே இருக்கட்டும். இது தொடர்பாக நான் மேற்கொண்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.