Politics
கனவாக போகும் ராகுலின் பிரதமர் கனவு!

த.யாபேத் தாசன், பேய்க் குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: கடந்த 2014ல் மோடி பிரத மரானதிலிருந்து இன்று வரை, காங்கிரஸ் எம்.பி., ராகுலின் செயல்பாடுகள் எதுவும் மெச்சிக் கொள்ளும்படியாக இல்லை.
பார்லிமென்டில் மக்கள் பிரச்னைகள், அவர்கள் தேவைகள் குறித்து விவாதிப் பதற்கு பதில், உப்புச்சப்பற்ற விஷயங்களை முன்னெடுத்து, அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும், அரசு விவாதிக்க தயார் என்றதும், வெளிநடப்பு செய்வதையுமே வழக்கமாக வைத்துள்ளார், ராகுல்.
இதனால், எந்த ஒரு விவாதமும் இல்லாமல், மசோதாக்கள் எளிதாக நிறைவேற்றப்படுகின்றன. தன் தவறை உணராத ராகுல், அதற்கும் மத்திய அரசை குறை கூறி நாடகம் நடத்துகிறார்.
மசோதாக்களின் விவாதத்தின் போது வெளி நடப்பு செய்தால், ஆளுங்கட்சி அதை எளிதாக நிறைவேற்றத்தானே செய்யும்?
சமீபத்தில் கூட, பார்லி மென்ட் கூட்டத்தை முடக்குவதற்காக இவர் தேர்ந்தெடுத்தது, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முன்னெடுத்த, 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கான போராட்டத்தை தான்!
மோடி அரசை எதிர்த்து எங்காவது, எவராவது போராட்டம் நடத்தினால் போதும்; உடனே வரிந்து கட்டி புறப்பட்டு விடும் ராகுல், தங்கள் கூட்டணி கட்சி ஆளும் ஜார்க்கண்டில் நடக்கும் மாணவர் போராட்டம் குறித்து மறந்தும் வாய் திறக்கவில்லை.
ராகுல் போடும் இந்த இரட்டை வேடத்தை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறந்து விட்டார்.
அதேபோல் தான் கரப்பான்பூச்சி கட்சியினரும்!
ராஜஸ்தான் அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் போராடுகின்றனர்; ஆனால், ஜார்க்கண்டை கண்டுகொள்ளவில்லை.
இதிலிருந்து, கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி என்பது மாணவர் இயக்கமல்ல; காங்., - ஆம் ஆத்மி, கம்யூ., கட்சியினரின் கைக்கூலிகள் என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது.
இவை எல்லாவற்றையும் விட, டில்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடி வெளிநாட்டு தலைவர்களிடம் நட்பு பாராட்டி கட்டிப்பிடிப்பதை கேலி செய்யும் விதமாக, ராகுல், காங்., மூத்த தலைவர் சந்தீப் தீக் ஷித்தை கட்டிப்பிடிக்க, அவரோ, இத்தாலி பெண் பிரதமரின் பெயரைச் சொல்லி, 'அவர் என்று நினைத்து கட்டிப்பிடிக்கவில்லையே?' என்று கேட்க, 'அந்த நிலைக்கு இன்னும் நான் வரவில்லை' என்று கூறி, ஒரு கேவலமான நாடகத்தை நடத்தி, பிரதமர் மோடியை களங்கப்படுத்த முயன்றார், ராகுல்.
பார்லிமென்ட் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மூன்று முறை தோல்வி அடைந்தும், மக்களின் நம்பிக்கையை பெற எந்த ஆக்கப்பூர்வமான செயல்களையும் செய்யாமல், இதுபோன்ற அரசியல் அவியல் செய்வதிலும், மட்டரகமான நாடகங்களை அரங்கேற்றுவதிலும் காலத்தை கடத்தி வருகிறார், ராகுல்.
இவர், தன் தவறுகளை திருத்திக் கொள்ளாத வரை, பிரதமர் கனவு என்பது ராகுலுக்கு கானல் நீரே!
போலி போராட்டம் ஏன்?
கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் சில பகுதிகளில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், வேறு கட்சிகள் நடத்தும் இத்தகைய போராட்டங்களை முன்னின்று நடத்துவது, உள்ளூர் தி.மு.க.,வினர் என்பது தான்!
முதன் முதலில் தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்ததும், கடந்த ஆட்சியில் மூலைக்கு மூலை மதுக்கடைகளை திறந்து, கல்லா கட்டியதும் தாங்கள் தான் என்பதை மறந்து, வேறு கட்சியின் முகமூடியை போட்டு, போராட்டம் எனும் அரசியல் நாடகம் நடத்துகின்றனர், தி.மு.க.,வினர்.
ஒருவேளை அரசு இவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்து, மதுக்கடைகளை மூடிவிட்டால் என்ன செய்வர்?
உரலுக்கு ஒருபக்கம் இடி; மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல் ஆகிவிடாதா மதுக்கூடங்கள் வைத்திருக்கும் உடன்பிறப்புகளின் நிலை!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி புலம்புவது ஏன்?
எம்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பா.ஜ., அல்லாத அரசுகள் ஆளும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிர திருத்தப் பணியின் வாயிலாக, சிறுபான்மையினரின் ஓட்டுகளை நீக்கி, பா.ஜ., வெற்றி பெற்று வருகிறது. இதே வஞ்சகமான உத்தியை, தெலுங்கானாவிலும் கையாள முயற்சிக்கிறது. காங்கிரசின் ஓட்டுச்சாவடி முகவர்கள் இதை முறியடிக்க வேண்டும்' என, புலம்பியுள்ளார், தெலுங்கானா அரசின் காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி.
இவரது பேச்சு உண்மையாக இருந்திருந்தால், சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில், பா.ஜ., அல்லவா வெற்றி பெற்று இருக்க வேண்டும்?
தமிழகத்தில், புதிதாக தேர்தல் களத்தில் குதித்த தமிழக வெற்றிக் கழகமும், கேரளாவில் காங்கிரஸ் கட்சியும் எப்படி வெற்றி பெற்றன?
பா.ஜ.,வின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட பீஹார் பாங்கிபூர் சட்டசபை தொகுதியில், சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், தேர்தல் ஆலோசகரும், 'ஜன் சூராஜ்' கட்சி தலைவருமான பிரசாந்த் கிேஷார் வெற்றி பெற்றது எப்படி?
பா.ஜ.,வின் வஞ்சகம் இங்கு வேலை செய்யவில்லையா?
கடந்த 2015ல் தெலுங்கு தேசம் கட்சியில் ரேவந்த் ரெட்டி இருந்தபோது, எம்.எல்.சி., தேர்தலில் தங்கள் கட்சியை சேர்ந்த நரேந்தர் ரெட்டிக்கு ஆதரவாக ஓட்டு போட, ஆங்கிலோ - இந்திய வம்சாவளியான நியமன எம்.எல்.ஏ., ஸ்டீபனுக்கு, 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற போது, தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு போலீசார், ரேவந்த் ரெட்டியை பணத்துடன் கையும் களவுமாக கைது செய்தனர். இன்று வரை அந்த வழக்கை சந்தித்து வருகிறார், ரேவந்த் ரெட்டி.
மேலும், ரேவந்த் ரெட்டியின் இந்த புலம்பலுக்கு காரணம், அவர் மீது அடுக்கடுக்காய் சுமத்தப்பட்டு வரும் ஊழல் குற்றச்சாட்டுகள்!
மத்திய அரசின், 'அம்ருத் 2.0' திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு பணிகளுக்கான, 1,137 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, தன் மைத்துனர் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், புதிய அனல் மின் நிலையங்களின் திட்டச் செலவு களை வேண்டுமென்றே உயர்த்தி, சட்ட விரோதமாக, 50 ஆயிரம் கோடி ரூபாயை , ' ஆட்டை ' போட்டு விட்டார் என்றும், கோடங்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ரங்கா ரெட்டி மாவட்டம் கன்சா கச்சிபவுலி வனப்பகுதி நில மோசடிகளில் முதல்வரின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்காய் ஊழல் குற்றச் சாட்டுகளை கூறி வருவதால், கொஞ்சம் ஆடிப் போய் உள்ளார் ரேவந்த் ரெட்டி.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் அவருக்கு குடைச்சலை கொடுத்து வருவதால், வரும் சட்டசபை தேர்தலில் காங்., தோற்று விட்டால், அதற்கு ஒரு சமாதானம் வேண்டுமே... அதற்காக, போடும் வெளி வேஷம் தான், பா.ஜ., மற்றும் தேர்தல் கமிஷன் மீதான குற்றச்சாட்டு!
எலி ஏன் ஏரோப்பிளேன் ஏற துடிக்கிறது என்பது கூடவா மக்களுக்கு தெரியாது?