Sport
'ஆசியா'...அசத்துமா இந்தியா: ஜப்பானில் ஆளப்போவது யாரு

நகோயா: ஆசிய விளையாட்டில் இந்திய நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்த காத்திருக்கின்றனர்.
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு (செப்.19 - அக்.4) நடக்க உள்ளது. 45 நாடுகளை சேர்ந்த 11,000 பேர் பங்கேற்கின்றனர். 43 விதமான போட்டிகளில் 469 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. சர்பிங், டெக்பால் போட்டிகள் அறிமுகமாகின்றன.
இந்தியா சார்பில் 35 போட்டியில் 501 பேர் (267 வீரர், 234 வீராங்கனைகள்) சாதிக்க உள்ளனர். கடந்த முறை (2022) 106 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, 4வது இடம் பிடித்தது. இம்முறை கூடுதல் பதக்கம் வெல்லலாம். ஆண்கள் ஹாக்கி, 'டி-20' கிரிக்கெட் அணியினர், ஆண்கள் கபடி அணி மீண்டும் தங்கம் தட்டிச் செல்ல வாய்ப்பு உண்டு. துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, பாட்மின்டன், மல்யுத்தம், தடகளத்தில் தடம் பதிக்கலாம்.
வைபவ் எதிர்பார்ப்பு: 'டி-20' கிரிக்கெட்டில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான அணி களமிறங்குகிறது. 15 வயது 'பேபி பாஸ்' வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்தில் இருந்தே விளாசலாம். பெண்கள் பிரிவில் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் படை பதக்கம் பெறுவது உறுதி.
ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங் உள்ளிட்டோர் ஜொலிக்கலாம். பெண்கள் பிரிவில் கேப்டன் சலிமா, ஜோதி அடங்கிய அணி அசத்தலாம். ஆண்கள் கபடி அணியினர் மீண்டும் தங்கம் கைப்பற்றலாம். பாட்மின்டனில் அனுபவ சிந்து, லக்சயா சென், காயத்ரி, திரீசா பதக்க வேட்டைக்கு தயாராக உள்ளனர்.
மின்னும் மனு பாகர்: துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் நாயகி மனு பாகர் தங்கத்தை குறி வைக்கலாம். பவானி தேவி (வாள் சண்டை), பிரனதி நாயக் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ஸ்குவாஷ் போட்டியில் ஜோஷ்னா, அனாஹத் சிங், தான்வி அசத்த உள்ளனர். டேபிள் டென்னிசில் மானவ் தாகர், ஹர்மீத் தேசாய், ஸ்ரீஜா அகுலா, டென்னிசில் சுமித் நாகல், யூகி பாம்ப்ரி, ஸ்ரீராம் பாலாஜி, அன்கிதா நம்பிக்கை தருகின்றனர். பளுதுாக்குதலில் மீரா பாய் சானு, அன்டிம், மல்யுத்தத்தில் அமன் ஷெராவாத், தீபக் புனியா முத்திரை பதிக்க உள்ளனர்.
நீரஜ் சோப்ரா விலகல்: தடகளத்தில் மீண்டும் அதிக பதக்கம் பெறலாம். ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) கணுக்கால் காயத்தால் விலகியது பின்னடைவு. இவருக்கு பதிலாக யஷ்விர் சிங் களமிறங்குகிறார். அனிமேஷ் குஜ்ஜுர் (100 மீ., ஓட்டம்), சந்தோஷ் தமிழரசன் (400 மீ., தடை ஓட்டம்), அவினாஷ் சாபிள் (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), ஸ்ரீசங்கர் முரளி (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல் (டிரிப்பிள் ஜம்ப்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்) திறமை நிரூபிக்க உள்ளனர்.
சமீபத்திய காமன்வெல்த் விளையாட்டு, குத்துச்சண்டையில் இந்தியா 7 தங்கம் உட்பட 10 பதக்கம் கைப்பற்றியது. லவ்லினா (குத்துச்சண்டை) மீண்டும் சாதிக்க காத்திருக்கிறார். ஹாக்கி அணியினர் தங்கம் வென்றால், லாஸ் எஞ்சல்ஸ் (2028) ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறலாம்.
ஆசிய அளவில், இலங்கையின் ருமேஷ் தரங்கா பதிரகே (ஈட்டி எறிதல்), ஜப்பானின் நிஷியாமா மிஸா (ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்), சிங்கப்பூரின் அமந்தா யப் (ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்), பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா எலா (டென்னிஸ்), சீனாவின் இளம் யு ஜிதி (நீச்சல்) உள்ளிட்ட நட்சத்திரங்கள் சாதிக்கலாம்.
இந்தியா '778'
ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியாவுக்கு 183 தங்கம், 238 வெள்ளி, 357 வெண்கலம் என மொத்தம் 778 பதக்கம் கிடைத்துள்ளன. கடந்த முறை (2023) சீனாவில் நடந்த போட்டியில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 106 பதக்கம் (28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம்) கிடைத்தன.
தடகளத்தில் '283'
ஆசிய விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கு தடகளத்தில் அதிகபட்சமாக 283 பதக்கம் கிடைத்துள்ளது. இதில் 85 தங்கம், 102 வெள்ளி, 96 வெண்கலம் அடங்கும். இதனையடுத்து துப்பாக்கி சுடுதல் (80 பதக்கம்), மல்யுத்தம் (65), குத்துச்சண்டை (61), டென்னிஸ் (34), ஹாக்கி (23), துடுப்பு படகு (28), பாய்மரப் படகு (23), வில்வித்தை (19), ஸ்குவாஷ் (18), ஸ்னுாக்கர்+பில்லியர்ஸ் (15), பளுதுாக்குதல் (14), கபடி (13), குதிரையேற்றம் (12) போட்டிகளில் அதிக பதக்கம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு வரலாற்றில் அதிக பதக்கங்கள் குவித்த நாடுகளுக்கான பட்டியலில் சீனா முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை 1674 தங்கம், 1105 வெள்ளி, 791 வெண்கலம் என, 3570 பதக்கங்களை அள்ளியது. அடுத்த இரு இடங்களில் ஜப்பான் (3242 பதக்கம்), தென் கொரியா (2425) உள்ளன. இப்பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் (183 தங்கம், 238 வெள்ளி, 357 வெண்கலம்) உள்ளது.
ஆசிய விளையாட்டு பதக்கப்பட்டியலில் அதிக முறை முதலிடம் பிடித்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை சீனா கைப்பற்றியது. இதுவரை 11 முறை (1982, 86, 90, 94, 98, 2002, 06, 10, 14, 18, 23) முதலிடம் பிடித்தது. இரண்டாவது இடத்தில் ஜப்பான் (8 முறை, 1951, 54, 58, 62, 66, 70, 74, 78) உள்ளது. வேறு எந்த ஒரு நாடும் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்ததில்லை.
இதுவரை 9 நாடுகள் ஆசிய விளையாட்டை நடத்தி உள்ளன. ஜப்பானில் 3வது முறையாக நடக்கவுள்ளது. இதற்கு முன், 1958ல் டோக்கியோ, 1994ல் ஹிரோஷிமா நகரில் நடந்தன. இதன்மூலம் ஆசிய விளையாட்டை அதிக முறை நடத்திய நாடுகளுக்கான பட்டியலில் 2வது இடத்தை தென் கொரியா (1986, 2002, 2014), சீனாவுடன் (1990, 2010, 2023) பகிர்ந்து கொண்டது ஜப்பான்.
* அதிகபட்சமாக தாய்லாந்து 4 முறை (1966, 1970, 1978, 1998) நடத்தியது. இந்தியா (1951, 1982), இந்தோனேஷியாவில் (1962, 2018) தலா 2 முறை நடந்தன. பிலிப்பைன்ஸ் (1954), ஈரான் (1974), கத்தார் (2006) தலா ஒரு முறை நடத்தின.
முதன்முதலாய்...
ஆசிய விளையாட்டு முதன்முதலில் 1950ல் டில்லியில் நடத்துவதாக இருந்தது. இதற்கான வேலைகள் தாமதமானதால் 1951ல் நடத்தப்பட்டது. இதன்மூலம் ஆசிய விளையாட்டை முதன்முதலில் நடத்திய பெருமையை இந்தியா பெற்றது.
* ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல் தங்கம் வென்ற பெருமையை சிங்கப்பூர் நீச்சல் வீரர் நியோ சிவீ கோக் (1500 மீ., 'பிரீஸ்டைல்') பெற்றார். இவர், 1951ல் நடந்த 'பிரீஸ்டைல்' பிரிவில் 4 தங்கம் வென்று சாதித்தார்.
* ஆசிய விளையாட்டில் அதிக பதக்கம் கைப்பற்றிய இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில், தடகள வீராங்கனை பி.டி. உஷா முதலிடம். இதுவரை 11 பதக்கம் (4 தங்கம், 7 வெள்ளி) வென்றுள்ளார்.
டில்லியில், 1951ல் ஆசிய விளையாட்டு முதல் சீசன் நடந்தது. இதன் 75வது கொண்டாட்டமாக தற்போது ஜப்பானில் 20வது சீசன் நடக்கிறது.