Politics
“மக்கள் நான்கு மாத ஆட்சியை பார்த்துள்ளனர்… இதுக்காகவே கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது” – சிபிஎம் சுகந்தி

"நான்கு மாத ஆட்சியை மக்கள் பார்த்துள்ளனர். குதிரை பேரத்தால் தவெக இழுத்த அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். இடதுசாரிகள் மக்களின் குரலுக்கு வலு சேர்க்கவே போட்டியிடுகிறோம்" என சிபிஎம் சுகந்தி தெரிவித்துள்ளார்.
சிபிஎம் சார்பில் மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் சுகந்தி, “குதிரை பேரத்தின் மூலம் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களை தவெக தங்கள் பக்கம் இழுத்து, பதவியை ராஜினாமா செய்ய வைத்து, தற்போது மீண்டும் அவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் ஆட்சி எப்படி இருந்தது என்பதையும், சட்டமன்றத்தில் மக்களுக்கான பணிகள் எப்படி நடைபெற்றன என்பதையும் மக்கள் பார்த்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சுகந்தி கூறியதாவது; ”பொதுவாக தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் இடைத்தேர்தல் எப்படி நடைபெறும் என்பது சட்டமன்ற உறுப்பினர்கள் இயற்கையை எய்தினால் அல்லது மரணத்தை தழுவினால் இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால், தற்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் என்பது மக்களுக்கு திணிக்கப்பட்ட தேர்தலாக உள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் வாக்கு கேட்டவர்கள், தற்போது விசில் சின்னத்தில் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
குதிரை பேரத்தின் மூலம் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களை தவெக தங்கள் பக்கம் இழுத்து, பதவியை ராஜினாமா செய்ய வைத்து, தற்போது மீண்டும் அவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் ஆட்சி எப்படி இருந்தது என்பதையும், சட்டமன்றத்தில் மக்களுக்கான பணிகள் எப்படி நடைபெற்றன என்பதையும் மக்கள் பார்த்துள்ளனர்.
இடதுசாரிகள் சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இடதுசாரிகள் சட்டமன்றத்திற்கு செல்வது, தொகுதி பிரச்சினைகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் குரலுக்கு மேலும் வலு சேர்க்கும். அதற்காகவே இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம்.
மதுராந்தகத்தில் இதுவரை அரசு கலைக் கல்லூரி இல்லை. அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கான வலுவான குரலாக சட்டமன்றத்தில் ஒலிப்போம். வேடந்தாங்கல் சரணாலயம் சரியான பராமரிப்பின்றி உள்ளது. அதனை முறையாக பராமரித்தால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதுடன், அரசுக்கும் மிகப்பெரிய வருவாய் கிடைக்கும். விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைக்க போதுமான குடோன்கள் இல்லை. மழையால் நெல் பாதிக்கப்படுவதால், பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளை அமைக்க வேண்டும்.
மதுராந்தகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள சர்க்கரை ஆலையை சீரமைத்து, அப்பகுதியில் விளையும் கரும்புக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகவும் சட்டமன்றத்தில் வலுவான குரல் கொடுப்போம்” என்றார்.
