Politics
உடையும் TVK கூட்டணி..!

த.வெ.க. கூட்டணிக் கட்சியினர் உதிர்ந்த நெல்லிக்காய் மூட்டையாக மாறிவிடுவார்களோ என்கிற நிலை உருவாகியிருக்கிறது. விஜய் பிரதமர் வேட்பாளர் என முன்வைக்கப்பட்ட த.வெ.க. பிரச்சாரத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசி வந்த னர். இப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியினரும் த.வெ.க.வை கடுமையாக விமர்சித்து வரு கிறார்கள். “"த.வெ.க. அரசு செய்வது அனைத்தை யும் ஏற்றுக்கொள்ள முடியாது. எப்பொழுதும் மக்கள் நலனில் நாங்கள் அக்கறை செலுத்து வோம், மக்களுக்கு விரோதமான விசயங்களை நாங்கள் எதிர்ப்போம். அதில் எந்த சமரசமும் கிடையாது. எங்கள் குரல் எப்பொழுதும் ஏழைகளின் பக்கமாகவே ஒலிக்கும். முதல்வரை அதிகாரிகள் வழிநடத்தக் கூடாது. முதல்வர்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும்''’என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் கூட்டாக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தனர். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் ஆதவ் அர்ஜுனா மற்றும் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவை சந்தித்த பிறகே இந்த அறிவிப்பு வெளியானது. இ.கம்யூ. மாநில செயலாளர் மு.வீரபாண்டியனை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைத்து ஆதவ் அர்ஜுனாவும், புஸ்ஸி ஆனந்தும் சந்தித்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் என்ன நடந்தது என தோழர்கள் வட்டாரத்தில் கேட்டபோது, “த.வெ.க. அரசு தமிழகமெங்கும் நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடிய மாணவ மாணவிகளை கைது செய்ததை கடுமையாக விமர்சிக்கிறார்கள் சக தோழர்கள். குறிப்பாக, கவர்னர் மாளிகை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் இளம் பெண் தோழர்களை மானபங்கப்படுத்தும் அளவிற்கு காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டது. வட சென்னையில் ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களை ‘நீட்’ எதிர்ப்புப் போராட்டத்துக்கு அழைக்கச் சென்ற மாணவர்களை காவல்துறை தாக்கியது. அவர்கள் மீது பல வழக்குகளைப் போட்டு சிறையிலும் அடைத்தது. மாணவர்கள் ஒன்றிய அரசை எதிர்த்துதான் போராடினார்கள். த.வெ.க. அரசை எதிர்த்துப் போராடவில்லை. அத்துடன் நில்லாமல் உயர்கல்வித் துறையி லிருந்து பல்கலைக் கழகங்களுக்கு ஒரு சர்க்குலர் விடப்பட்டது. அதில் இடதுசாரி அமைப்புகள் மற்றும் காக்ரோச் ஜனதாக் கட்சியில் மாண வர்கள் பங்கெடுப்பது குறித்து கணக்கெடுத்துச் சொல்லும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.
காக்ரோச் ஜனதாக் கட்சி அகில இந்திய அளவில் நடத்திய போராட்டங்களில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் பங்கெடுத் திருந்தன. டெல்லியில் நடந்த போராட்டத்திலும் இடதுசாரி அமைப்புகள் கலந்துகொண்டன. அந்தப் போராட்டத்தின் விளைவாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். அதற்கும் காரணம் இடதுசாரி அமைப்புகள்தான். ஒன்றிய பா.ஜ.க. அரசு, இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் வளர்ந்து நிற்கும் காக்ரோச் ஜனதாக் கட்சியை நசுக்க விரும்புகிறது. அதற்காக ஒரு கணக்கெடுக்கும் பணியை இந்தியா முழுவதும் செய்கிறது. மாணவர்கள் மத்தியில் பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் செய்யப்படும் இந்த கணக்கெடுப்பை தமிழகத்திலும் நடத்த தலைமைச் செயலாளர் முடிவு செய்து அதை பல்கலைக் கழகங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்புகிறார். அதேபோல் நக்சல் அமைப்புகளை ஒழிக்கத் திட்டமிட் டுள்ள ஒன்றிய அரசு, மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள கம்யூனிஸ்ட்களை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளது. அதையும் தலைமைச் செயலாளர் சாய்குமார் செயல்படுத்துகிறார். குஜிலியம்பாறை பகுதியில் இயங்கும் கம்யூனிஸ்ட்களை கணக்கெடுக்க ஒரு தாசில்தாரை அரசு அனுப்புகிறது. அவர் கம்யூனிஸ்ட்களிடமே சென்று அந்த கணக்கெடுப்பு சம்பந்தமாகக் கேள்வி கேட்கிறார். இப்படி மத்திய அரசு சொல்வதை யெல்லாம் செய்யலாமா, கம்யூனிஸ்ட்களின் ஆதரவில் செயல்படும் த.வெ.க. அரசு கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக செயல்படுவது சரியா? தலைமைச் செயலாளர் போட்ட அந்த உத்தரவைப் பற்றி சட்டமன்றத்தில் கேட்டபோது உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் போகிற போக்கில் "அது தவறு'’என்கிறார். பா.ஜ.க.வின் உத்தரவுகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? என கம்யூனிஸ்ட் தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் இந்த விவகாரம் கடுமையான எதிர்ப்பலைகளை உருவாக்கி யுள்ளது. பெரும்பான்மையான கம்யூனிஸ்ட்கள் "த.வெ.க. அரசு பா.ஜ.க. அரசின் சொல்படிதான் நடக்கிறது.. இந்த அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்க வேண்டும்' என கட்சிக்குள் போராடி வருகிறார்கள். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் ‘த.வெ.க. அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் கிளம்புவார்கள்’ என முதல்வர் விஜய்க்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
பா.ஜ.க. சொல்படிதான் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் இல்லை எனவும், விஜய்யை பிரதமர் வேட்பாளர் எனவும் த.வெ.க. முன்னிறுத்துகிறது என காங்கிரஸ்காரர்கள் சந்தேகப்படுகிறார்கள். இப்படி காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என எதிர்க்கும் சூழ்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. சையத் பரூக் பாஷா ‘கோடிக்கணக்கான பணத்துடன் அமைச்சர் பதவி தருவதாக த.வெ.க. பேரம் பேசியது’ என பொதுக்குழு கூட்டத்தில் பேசி பரபரப்பை கிளப்பியிருக்கிறார். சி.பி.எம். கம்யூனிஸ்ட் கட்சியில் சு.வெங்கடேசன் விஜய்க்கு ஆதரவான நிலையெடுத்து பேசி வருகிறார். மற்றவர்கள் த.வெ.க.வுக்கு எதிராகப் பேச, அந்த எதிர்ப்பே சண்முகம் மற்றும் வீரபாண்டியன் பேச்சுக்களில் எதிரொலிக் கிறது. த.வெ.க. கடைப்பிடிக்கும் சோபா மாடல் உத்திகள் பற்றியும் கம்யூனிஸ்ட்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். அதனால் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்து வெளிநாட்டுக்கு செல்லும் முன் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தை விஜய் கூட்டியிருக்கிறார். அந்தக் கூட்டத்திற்கு யார் செல்வார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது” என்கிறார்கள் த.வெ.க.வினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)