Lifestyle and human interest
“கைப்பேசி பாதுகாப்பு கட்டணம் குறித்து கோயில்களே முடிவெடுக்கலாம்” - அறநிலையத்துறை அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் கடந்த 1ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல முழு தடை விதிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் பழனி, திருச்செந்தூர், மதுரை, இராமேஸ்வரம் போன்ற கோயில்களில் உள்ள நடைமுறைகளின் அடிப்படையில், புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சுவாமி சிலைகளைப் படம் எடுப்பது, வீடியோ, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பதால் பிற பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காகக் கோயில்களில் பாதுகாப்பு கவுண்டர்கள், லாக்கர்கள் மற்றும் மென்பொருள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இச்சேவைக்கான ஊழியர் மற்றும் தொழில்நுட்ப பராமரிப்புச் செலவுக்காக மட்டும் ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செல்போன்களை பாதுகாப்பதற்கு ரூ.5 கட்டணம் விதித்துள்ள நடைமுறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டணம் குறித்து சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என அறநிலையத்துறை தெஇர்வித்துள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கட்டணமில்லா கைப்பேசி பாதுகாப்பு பெட்டகங்களாக பயன்படுத்த அந்த கோயில் நிர்வாகம் மற்றும் அரங்காவலர்கள் குழு முடிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய செல்போன்களை பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனம் செய்ய இயலும் என்றும் கோயில்களுக்குள் செல்லக்கூடிய பக்தர்கள் கைப்பேசி பயன்படுத்தி போட்டோ, வீடியோ எடுப்பது அல்லது பக்தர்களுக்கு இடையூறாக செயல்பட்டால் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனவும் கோயில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)