Lifestyle and human interest
ரூ.5 யாருக்கு? -கோவில்களில் வசூல் வேட்டை!

உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தும் பொருட்டு 1.9.2026 முதல் கைபேசி தடை விதிமுறைகள் 52 திருக்கோவில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அறநிலையத்துறை.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருத்தணி முருகன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ் வரர் கோவில் உள்ளிட்ட 52 கோவில்களில் பக்தர்கள் செல்போன் பேச தடைவிதித்துள்ளது த.வெ.க. அரசின் அறநிலையத்துறை. கோவிலின் புனிதத் தன்மை, ஆன்மிக அமைதியைப் பாதுகாக்கவும், பக்தர்களின் கவனச் சிதறலைக் குறைக்கவும் செல்போன் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், மேற்கண்ட நடை முறையைச் செயல்படுத்த பக்தர்கள் செல்போனை எடுத்துச்செல்லாமல் திருக் கோவிலின் முன்பகுதிகளில் கவுண்டர்களில் செல் போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.
அதுபோக, இத்திட்டத்தை புதிதாக நாங்கள் கொண்டுவரவில்லை. ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை இருக்கையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல நீதிப் பேராணை மனுவில் வழங்கப்பட்ட உத்தரவின் படி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 14.11.2022 முதல் கைபேசி பயன்பாட்டுக்கு தடை நடைமுறையில் இருக்கின்றது. இந்த உத்தரவினை முழுமையாக செயல்படுத்தும் பொருட்டு 1.9.2026 முதல் கைபேசி தடை விதிமுறைகள் 52 திருக்கோவில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
"கொரோனா காலத்துக்குப் பிறகான காலத்தில் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறை அருகில் பக்தர் ஒருவருக்கும் ஊழியர் களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் சென்னை உயர்நீதிமன்றம் நீதிப்பேராணை மனு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கைப் படி 1.10.2023 முதல் பழனி தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் மலைக்கோயிலுக்கு கைபேசி எடுத்துச் செல்ல அனுமதிமறுக்கப்பட்டு மலையடிவாரத்தில் கைபேசி வைப்பு மையம் வைக்கப்பட்டது. இதில் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களிடமிருந்து கை பேசி வைக்கப்பட்டு அதற்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அன்றைய நாள் தொடங்கி இன்றுவரை பக்தர்களிடம் செல்போனுக்காக வசூலிக்கப்பட்ட பணம் என்னவானது'' என கேள்வியெழுப்புகிறார் பழனியைச் சேர்ந்த மாலதி.
பொள்ளாச்சியை சேர்ந்த ஆர்.டி.ஏ. ஆர்வலர் முத்துக்குமாரசுவாமி இதுகுறித்து பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாகத்திடம் தகவலறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தகவல்கள் கேட்ட நிலையில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள் ளது. அத்தகவலின் படி, 2023 லிருந்து 2026 ஜூன் வரை செல்போனுக்காக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.5,00,24,965. வருட வாரியாக 2023-ஆம் ஆண்டில் ரூ.43,98,530, 2024-ஆம் ஆண்டில் ரூ.1,62,87,795, 2025-ஆம் ஆண்டில் ரூ.1,97,33,895 மற்றும் 2026 31.6.2026 வரை ரூ. 96,04,745 என்கின்றது. இந்தப் பணத்தை என்ன செய்தது? என்ற கேள்வி ஒருபுறமிருப்பினும், இந்த பணத்தைக் கொண்டு பக்தர்களுக்கு எந்தவொரு மேன்மையும் செய்யவில்லை என்பதே உண்மை.
திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமகிருஷ்ணனோ, "தரிசனக் கட்டணம் செலுத்தியும், பொது தரிசனம் வழியாக பல மணி நேரம் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் நிலையில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் 10 அல்லது 20 பேருடன் புடைசூழ கோவிலின் உள்ளே நுழைவார்கள். எந்தக் கட்டணமும் செலுத்தாமல், காத்திருக்காமல் கருவறைக்கு எதிரே அமர்ந்து தரிசனம் செய்து செல்வர். பல கோவில்களில் செல்ஃபி எடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். திருவிழா போன்ற முக்கிய விசேஷ நாட்களில் உயரதிகாரி களின் குடும்பத்தினர் கும்பலாக பலரை உள்ளே அழைத்துச் செல்வார்கள். கோவிலின் புனிதத் தன்மை கெடும் என செல்போனுக்கு தடை விதித்தவர்கள் இவர்களது செல்போனுக்கும் தடைவிதிப்பார் களா?'' என்கின்றார் அவர்.
"பக்தர்களின் கருத்துக்களையோ, ஆய்வின் உண்மை நிலையையோ உணராமல் அறநிலையத் துறை, உயர்நீதிமன்றத்தின் 2022 உத்தரவைச் சுட்டிக்காட்டி 2026-ல் தீவிரமாக அமல்படுத்துவது வேடிக்கையாக உள்ளது. எத்தனையோ பல உத்தரவுகளை நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் அமல் படுத்தாத அரசுகள் இதை மட்டும் அமல்படுத்து வது ஏற்புடையதல்ல. பழனி, திருத்தணி, ராமேஸ்வரம் போன்ற திருக் கோவில்களுக்கு இந்த உத்தரவு சாத்தியப்பட்டாலும், திருச்செந்தூர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ் வரர் திருக்கோவிலுக்கு இந்த திட்டத்தை அமல்படுத்துவது வருந்தத் தக்கது. அதாவது, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 14 கிலோமீட்டர் பௌர்ணமி கிரிவலம் வந்து, அதன்பிறகு வடக்கு கோபுரம் வழியாகவும், கிழக்கு ராஜகோபுரம் வழியாகவும், தரிசனம் செல்வதற்கு செல்போன் வைத்துவிட்டு செல்வது என்பது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். திருமஞ்சன கோபுரம், தெற்கு கோபுரம் வழியாகத்தான் பக்தர்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.
செல்போனை வாங்குவதற்கு ராஜகோபுரம் வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் சென்றுதான் மீண்டும் வாங்கமுடியும். மேலும் குரூப் குரூப்பாகத்தான் எல்லோரும் பௌர்ணமி கிரிவலம் செல்கிறார்கள். அதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது. செல்போனுக் காக இதுவரை வசூலித்த தொகை என்னவானது? என்பது குறித்து வெள்ளை அறிக்கையை அரசு கொடுக்க வேண்டும்'' என்கின்றார் ஆர்.டி.ஏ. ஆர்வலரான முத்துக் குமாரசுவாமி.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய அற நிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "எதிர்காலத்தில் நடுத்தர, சிறிய கோவில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும். செல்போனை பாது காக்க வசூலிக்கப்படும் ரூ.5 கட்டணம் கோவில் வருவாய் ஈட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்டதல்ல. ஊழியர்கள், தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவு களை ஈடுகட்ட மட்டுமே குறைந்தபட்ச கட்டண வசூல்.'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)