Lifestyle and human interest
கோயிலுக்குள் கேமரா போன்களுக்குத் தடை... உங்கள் கருத்து என்ன?
அரசு, ஆலய விஷயத்தில் பக்தர்களோடு மோதல் போக்கை உருவாக்கக் கூடாது. கோயிலுக்கு வெளியே மொபைலை வைத்துவிட்டுச் செல்லச் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 52 முக்கியக் கோயில்களில் செல்போன் தடை அமலுக்கு வந்துள்ளது. கேமரா இல்லாத சாதாரண போன் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இதனால் கோயிலுக்குள் புகைப்படம், ரீல்ஸ் எடுப்பது தடுக்கப்படும், மக்கள் இடையூறின்றி தரிசனம் செய்யலாம்’ என்று ஒரு தரப்பினர் இதை வரவேற்க, ‘கோயிலுக்குள் இருக்கும்போது சம்பந்தப்பட்டவருக்கு ஒரு முக்கிய அழைப்பு, அவசர அழைப்பு வந்தால் என்ன செய்வது? மேலும், கோயிலுக்குள் நடக்கும் மோசடிகளை பொதுமக்கள் வீடியோ பதிவு செய்வதைத் தடுக்க இந்தத் தடையா?’ என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதில் உங்கள் கருத்து என்ன... பகிர்ந்துகொள்ளுங்கள்!
அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம்.வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...
கோயிலுக்குள் போட்டோ, வீடியோ எடுக்கக் கூடாது என்பது சரி. ஆனால், கோயிலுக்குள் போனே வைத்திருக்கக் கூடாது என்பது அநாவசியமான தடை. அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
டெக்னாலஜி வளரும்போது, அதைத் தள்ளி வைக்கும் சமூகம் பிராக்டிக்கலானதாக இருக்காது. சொல்லப்போனால், போட்டோக்களும், ரீல்ஸ்களும் இன்று வாழ்வின் அங்கமாகிவிட்ட நிலையில், அதற்குத் தடை விதிப்பதே முரணானதுதான். ‘மற்றவர்களுக்குத் தொந்தரவு செய்யும் வகையில், இடத்தின் மாண்பைக் குறைக்கும் வகையில் போட்டோ, வீடியோ எடுக்கக் கூடாது’ என்று வலியுறுத்தலாம். கோயிலுக்கு வரும் அனைவருமே போன் எடுத்து வரக் கூடாது என்றெல்லாம் தடை விதிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
நல்ல முயற்சி. கோயிலுக்கு வர்ற சிலர் செல்ஃபி எடுக்குறது, ரீல்ஸ் எடுக்குறதுனு கொடுக்குற தொல்லைகள் பல. இந்தத் தடை, இனி மக்கள் தொந்தரவு இல்லாம தரிசனம் பண்ணவைக்கும்.
இன்றைய சூழ்நிலையில், பெரிய கோயில் களுக்குள் சென்றால் கூட்டம், வரிசை என வெளியே வர நீண்ட நேரம் ஆகும். எனில், ஒரு மணி நேரம் முதல் பல மணி நேரம் வரை ஒருவரால் போன் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? ஏதேனும் அவசர செய்திகள் என்றால், அவர் எப்படி அறிவார் அல்லது கோயிலுக்குள் அவருக்கே மயக்கம், உடல்நலக் குறைவு என்று ஏற்பட்டால், அவர் வீட்டுக்கு எப்படித் தெரிவிப்பார்? தொழில், வேலை தொடர்பான தகவல்களைத் தவறவிட நேர்ந்தால் என்ன செய்வது? கோயிலுக்கு வரும் மக்களை சிரமத்துக்குள்ளாக்கக் கூடாது.
அரசு, ஆலய விஷயத்தில் பக்தர்களோடு மோதல் போக்கை உருவாக்கக் கூடாது. கோயிலுக்கு வெளியே மொபைலை வைத்துவிட்டுச் செல்லச் சொல்கிறார்கள். அப்போது போனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? சாதாரண போன் அனுமதிக்கப்படும் என்றால், அதற்காக மக்களால் இரண்டு போன்கள் வைத்துக்கொள்ள முடியுமா?
தமிழகக் கோயில்கள் கலைநயம் கொண்டவை. மண்டபங்கள், உட்பிராகாரம், வெளிப்பிராகாரம், அற்புதமான சிற்பங்கள், அழகிய வடிவமைப்பு திருக்கோபுரங்கள் என இவற்றை எல்லாம் மக்கள் மொபைல்களில் படம், வீடியோ எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். மற்றவர்களுக்குத் தொந்தரவு தரும் வகையில் படம்பிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தலாம்.
இந்தத் தடையால் மக்கள் எவ்வளவு சிரமப் படுவார்கள் என்று தெரியும். ஆனால், இந்தத் தடையைப் போட வைத்ததே, வழிபாட்டுத் தலங்களில் ரீல்ஸ் எடுத்து தொந்தரவு கொடுத்த மக்கள்தானே? என்றாலும், மொபைல் அத்தியாவசியமாகியுள்ள நிலையில் இந்தத் தடையில் தளர்வுகள் தேவை.
‘கருவறையில் படம் எடுக்கக் கூடாது’ என்பது சரி. ஆனால், கோயிலுக்கு உள்ளேயே செல்போனை அனுமதிக்க முடியாது என்பது அதிகார ஆணவத்தின் உச்சம். சொல்லப்போனால், கோயிலுக்குள் நடக்கக்கூடிய தவறுகளை, ஊழல்களை பொதுமக்கள் தங்கள் செல்போன்களின் மூலம் படம் பிடித்து சமூக வலைதளங்களின் மூலம் உலகுக்குக் வெளிப்படுத்துவதை முடக்குவதற்கு இந்தத் தடையா என்றும் கேள்வி எழுகிறது.
