Lifestyle and human interest
கோயில்களில் தானாக முன்வருபவர்களிடம் மட்டும் அலைபேசி வாங்க உத்தரவு கட்டாயப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தல்
மதுரை: தமிழகத்தில் செப்.,1 முதல் கோயில்களில் அலைபேசி கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கட்டாயப்படுத்த வேண்டாம் என அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அறநிலையத்துறைக்குட்பட்ட 52 கோயில்களில் கருவறையை படம் எடுப்பது, 'ரீல்ஸ்' எடுப்பதை தவிர்க்க செப்.,1 முதல் பக்தர்கள் அலைபேசி கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. அலைபேசியை ரூ.5 கட்டணம் செலுத்தி பாதுகாக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இது பக்தர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் என பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தன.
இதைதொடர்ந்து கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வருவோரிடம் கட்டாயப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். இந்நிலையில் 52 கோயில் செயல்அலுவலர்களுக்கு அறநிலையத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதில், பக்தர்களை கட்டாயமாக லாக்கரில் அலைபேசியை வைக்க சொல்ல வேண்டாம். தானாக முன்வந்து வைப்பர்களிடம் மட்டும் பெற்றுக்கொள்ளவும். தொடர் விடுமுறை காரணமாக நீண்ட நேரம் வரிசையில் அலைபேசிக்காக நிற்கிறார்கள் என்ற பிரச்னை வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் பொருந்தும் என அறிவிக்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர் அறநிலையத்துறையை வலியுறுத்தி உள்ளனர்.