Politics
புறம் தள்ளப்பட்ட கிருஷ்ணசாமி; இடைத்தேர்தலில் ஆதரவைக் கேட்கும் அதிமுக!

தமிழகத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அன்று நடைபெறும் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன. இதற்கிடையில், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன.ஏற்கெனவே தவெக, திமுக, அதிமுக, நாதக என 4 முனை போட்டி இருந்த நிலையில், இடதுசாரிகளின் இந்த அறிவிப்பால் இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிகழ்ந்துள்ளது. இது ஒருபுறமிருக்க இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தோழமை மற்றும் கூட்டணி கட்சிகளிடம் அதிமுக ஆதரவு திரட்டி வருகிறது. அதன்படி, பா.ஜ.க, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய தலைவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.
இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியிடம் அதிமுக ஆதரவு கோரியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிமுக மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் கிருஷ்ணசாமியை சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, 15 தொகுதிகள் வரை கிருஷ்ணசாமி கேட்டதாகவும், அதனை மறுத்த அதிமுக அதிகபட்சமாக 5 தொகுதிகள் வரை கொடுக்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் கிருஷ்ணசாமி தொடர்ந்து அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். அதனை கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கட்சிக்கு வெறும் 33,000 வாக்கு வங்கி தான் இருக்கிறது, அதனால் கிருஷ்ணசாமிகேட்ட தொகுதிகளை கொடுக்க முடியாது என கறாராகக் கூறிவிட்டார். இதில் அதிருப்தியடைந்த கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி 70 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டார். இந்த சூழலில், இந்த இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சியிடம் அதிமுக ஆதரவு கேட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)